ஆஸ்திரேலியா தொடரை முடித்து விட்டு நேராக இந்தியா வந்தடைந்த ரிஷப் பண்ட், வந்தவுடனேயே முன்னாள் கேப்டன் தோனியை அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்து இருக்கிறார். இதற்கான காரணங்கள் என்னவென்று தற்போது தெரியவந்துள்ளது.
இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை வரலாறு காணாத வகையில் முதல் போட்டியில் தோல்விக்குப் பிறகு 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி கோப்பையை தக்க வைத்துள்ளது. இந்த தொடரில் 3வது மற்றும் 4வது போட்டியில் ஹீரோவாக திகழ்ந்த ரிஷப் பண்ட் நான்காவது டெஸ்ட் போட்டியை இக்கட்டான சூழலில் நிலைத்து நின்று வெற்றியை பெற்றுத் தந்தார். இதனால் இவருக்கு பாராட்டுக்கள் குவிந்தன.
இந்நிலையில் ரிஷப் பண்ட் நேரடியாக இந்தியா வந்தவுடன் சற்றும் தாமதிக்காமல் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி இருவரையும் நேரில் சந்தித்து பேசியிருக்கிறார். இதற்கான புகைப்படத்தையும் தோனியின் மனைவி சாக்சி இன்ஸ்டாகிராம் அதிகாரப்பூர்வ பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.
இந்த புகைப்படத்தை பார்க்கையில் அவர்கள் குதூகலமாக நேரத்தைக் களித்தது போல தெரிகிறது. இந்நிலையில் எதற்காக அவர் தோனியை இந்தியா வந்த உடனேயே சந்திக்கச் சென்றார் என்ற கேள்விக்கு, அடுத்த சில நாட்களிலேயே சென்னை மைதானத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் இருப்பதால் அதற்காக சில டிப்ஸ்கள் பெற்றுக் கொள்ளவும், அதேநேரம் ஆஸ்திரேலிய தொடரில் நேர்ந்த தவறுகள் குறித்தும் வெளிநாடுகளில் விளையாடும் பொழுது எந்த அளவில் மனநிலையில் இருக்க வேண்டும் என்பது குறித்தும் இவர்கள் பேசிக் கொண்டதாக நட்பு வட்டார தகவல்கள் வெளிவருகின்றன.
அதிகாரபூர்வமாக பத்திரிகையாளர் சந்திப்பில் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் குறித்து பேசிய பண்ட் கூறுகையில், “கடைசி டெஸ்ட் போட்டியில் நிச்சயம் வென்றே ஆகவேண்டும் என களம் இறங்கினோம். அந்த மைதானம் முற்றிலுமாக ஆஸ்திரேலியாவிற்கு சாதகம் என்றாலும் அதை நாங்கள் ஒருபோதும் சிந்திக்கவில்லை. முடியும் என்று நினைத்தோம். எங்களது முதல் எண்ணம் வெற்றி பெறுவதுதான். இரண்டாவது தான் டிரா குறித்த எண்ணம். இந்த தொடரில் சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தது எனக்கு சற்று வேதனையாகத்தான் இருக்கிறது. அதனை முதலில் நான் உணரவில்லை. பின்புதான் தெரிந்து கொண்டேன்.” என்றார்