ஐபிஎல் 2020-க்காக ஐசிசி டி20 உலகக்கோப்பையை தள்ளி வைக்க ஐசிசி-க்கு பிசிசிஐ மறைமுக நெருக்கடி கொடுத்தார்கள் என்று பாகிஸ்தானின் முன்னாள் வீரர்கள் சிலர் கருதும் அதே வேளையில் இந்தியாவில் 2023-ம் ஆண்டு நடைபெறும் 50 ஓவர் உலகக்கோப்பையின் காலநேரத்தை மாற்றியதன் பின்னணியில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இருப்பதாக சில தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
அதாவது பிசிசிஐ-க்காக ஐபிஎல் நடத்த உலகக்கோப்பையை தியாகம் செய்தது போல் 2023 பாகிஸ்தான் சூப்பர் லீக் நடத்த ஏதுவாக உலகக்கோப்பை கால நேரத்திலும் மாற்றம் செய்ய வேண்டும் என்று பாகிஸ்தான் ஐசிசிக்கு நெருக்கடி கொடுத்து உலகக்கோப்பையை அக்டோபர் மாதத்துக்குத் தள்ளி வைக்கச் செய்ததாக செய்திகள் கசிந்து வருகின்றன.
இந்தச் செய்தியை தி நியூஸ் என்ற ஊடகம் வெளியிட்டுள்ளது. உண்மையில் 2023 ஐசிசி உலகக்கோப்பை பிப்ரவரி-மார்ச்சில் தான் நடைபெற வேண்டும். இதே காலக்கட்டத்தில்தான் பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 போட்டிகள் நடைபெறும். எனவே பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ஈசான் மானி, ஐசிசியை நெருக்கி 2023 உலகக்கோப்பையை அக்டோபருக்கு தள்ளச் செய்தார் என்று அந்தச் செய்தி கூறுகிறது.
முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் ஷோயப் அக்தர் மற்றும் ரஷீத் லடீப் ஆகியோர் பிசிசிஐ ஐசிசியின் கைகளை முறுக்கி உலகக்கோப்பை டி20-யை ஐபிஎல் க்காக தள்ளி வைக்கச் செய்தது என்று குற்றம் சாட்டியுள்ளனர்.