ஆவேஸ் கானை 10 கோடி ரூபாய் கொடுத்து எடுத்தது இதற்காக தான்; விளக்கம் கொடுத்த கவுதம் கம்பீர் !!

ஐபிஎல் ஏலத்தில் இளம் பந்துவீச்சாளரான ஆவேஸ் கானை 10 கோடி ரூபாய்க்கு எடுத்ததற்கான காரணத்தை லக்னோ அணியின் ஆலோசகரான கவுதம் கம்பீர் வெளியிட்டுள்ளார்.

15வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெங்களூரில் வைத்து நடத்தப்பட்டது. இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த ஏலத்தில் ஒவ்வொரு அணியும் தங்கள் கைவசம் இருந்த தொகையை வைத்து, தங்களுக்கு தேவையான வீரர்களை தேர்ந்தெடுத்து கொண்டன.

 

இந்த ஏலத்தில் வழக்கத்திற்கு மாறாக இளம் வீரர்கள் பலருக்கு கடுமையான போட்டி நிலவியது. டேவிட் வார்னர் போன்ற சீனியர் வீரர்களை விட ஸ்ரேயஸ் ஐயர், இஷான் கிஷன், ஆவேஸ் கான் போன்ற இளம் வீரர்களை எடுக்க மிக கடுமையான போட்டி நிலவியது.

இஷான் கிஷன், ஸ்ரேயஸ் ஐயர் போன்ற வீரர்கள் அதிக தொகைக்கு ஏலம் போனதை விட ஆவேஸ் கானிற்காக கடும் போட்டி நிலவியதும், இறுதியாக அவரை லக்னோ அணி 10 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்ததும் பலருக்கு ஆச்சரியத்தை கொடுத்தது. வெறும் 20 லட்சம் ரூபாயை அடிப்படை விலையாக நிர்ணயித்திருந்த ஆவேஸ் கானிற்கு 10 கோடி ஏன் இவ்வளவு போட்டி…? சர்வதேச போட்டிகளில் இதுவரை விளையாடாத ஒருவருக்கு 10 கோடி ரூபாய் அதிகம் இல்லையா..? என ஒரு சில முன்னாள் வீரர்கள் கேள்வி எழுப்பியிருந்த நிலையில், தற்போது இதற்கான பதிலை லக்னோ அணியின் ஆலோசகரான கவுதம் கம்பீரே வெளியிட்டுள்ளார்.

இது குறித்து கவுதம் கம்பீர் பேசுகையில், “ பிரசித் கிருஷ்ணாவுக்காக ரூ.9.5 கோடி வரை சென்றோம். ஆனால் அவரை எடுக்க முடியவில்லை. அதனால்தான் நல்ல வேகத்தில் பந்துவீசக்கூடிய ஆவேஷ் கானை நல்ல தொகை கொடுத்து எடுத்தோம். நாங்கள்(லக்னோ அணி) சில வீரர்களுக்கு அதிகமான தொகை கொடுத்துவிட்டதாக சிலர் பேசுகிறார்கள் என்பதை நான் அறிவேன். ஆனால் ஆவேஷ் கான் விஷயம் வேறு.. அவரை மையமாக வைத்து இந்திய அணியின் பவுலிங் யூனிட்டை கட்டமைக்கலாம். அந்தளவிற்கு திறமையான பவுலர். மக்கள் நிகழ்காலத்தை பற்றித்தான் பேசுவார்கள். ஆனால் நாங்கள் எதிர்காலத்தை பற்றி சிந்திப்போம். 145 கிமீ வேகத்தில் வீசக்கூடிய ஆவேஷ் கான், ஆட்டத்தின் எந்த மாதிரியான சூழலிலும் வீசவல்லவர்” என்று தெரிவித்தார்.

Mohamed:

This website uses cookies.