கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற இருக்கும் பகல்-இரவு டெஸ்ட் போட்டிக்கான முதல் நான்கு நாட்களுக்கான டிக்கெட்டுக்கள் விற்று தீர்ந்தன.
இந்தியா – வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நாளைமறுநாள் நடக்கிறது. இந்த போட்டி பகல்-இரவு ஆட்டமாக நடக்கிறது. இதில் ரெட் பந்திற்குப் பதிலாக பிங்க் பந்து பயன்படுத்தப்பட இருக்கிறது.
முதன்முதலாக இந்திய அணி பிங்க் பந்தில் விளையாடுகிறது. வங்காளதேசம் அணி டெஸ்ட் போட்டியில் விளையாட அந்தஸ்து பெற்றபோது, முதல் போட்டியில் இந்தியாவை எதிர்த்துதான் விளையாடியது.
தற்போது முதல் பிங்க் பால் போட்டியிலும் இந்தியாவை எதிர்த்து விளையாடுகிறது. வரலாற்று சிறப்பு வாய்ந்த இந்த போட்டியை சிறப்பாக நடத்த பிசிசிஐ மற்றும் பெங்கால் கிரிக்கெட் சங்கம் விரும்புகின்றன.
போட்டியை வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினா, பெங்கால் முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர்.
போட்டியின் இடைவேளையின்போது முன்னாள் ஜாம்பவான்கள் ரசிகர்களின் முன் தோன்றி தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொள்ள இருக்கின்றனர்.
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் சுமார் 80 ஆயிரம் ரசிகர்கள் அமர்ந்து போட்டியை ரசிக்கலாம். இந்த போட்டிக்கான முதல் நான்கு நாட்களுக்கான டிக்கெட்டுக்கள் முழுவதுமாக விற்று தீர்ந்தன என்று பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.
வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் ஷஹாதத் ஹுசைன் உள்ளூர் போட்டி ஒன்றில் சகவீரர் அராபத் சன்னி ஜூனியர் என்ற வீரரை மைதானத்திலேயே அடித்து உதைத்ததால் அவருக்கு 5 ஆண்டுகள் தடை விதித்தது வங்கதேச கிரிக்கெட் வாரியம்.
குல்னாவில் நடைபெற்ற தேசிய கிரிக்கெட் லீக் போட்டி ஒன்றில் ஷஹாதத் ஹுசைன் சக வீரர் அராபத் சன்னியை கடுமையாகத் தாக்கினார்.
அதாவது தனக்காகப் பந்தை தேய்த்து பளபளப்பு ஏற்றித் தருமாறு ஷஹாதத் ஹுசைன் கேட்க அதற்கு அராபத் சன்னி மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து வாக்குவாதம் முற்ற அடிதடியில் முடிந்து ஹுசைன் சக வீரரையே தாக்கியுள்ளார்.
இதனையடுத்து ஷஹாதத் ஹுசைனுக்கு 1,00,000 டாக்காக்கள் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் 5 ஆண்டுகள் இவருக்குத் தடை விதிக்கப்பட்டது, இரண்டு ஆண்டுகள் சஸ்பெண்டட் தண்டனையாகும்.
ஷஹாதத் ஹுசைன் வங்கதேசத்துக்காக 38 டெஸ்ட் போட்டிகள் 51 ஒருநாள் போட்டிகள் 6 டி20 போட்டிகளில் ஆடியுள்ளார்.
இவர் ஒரு கடும் கோபக்காரர் என்பது ஏற்கெனவே ஒரு சம்பவத்தில் நிரூபிக்கப்பட்டது, வீட்டு வேலைக்காரப் பணியாளரை அடித்ததாக இவர் 2015-ல் கைது செய்யப்பட்டது முதல் அணிக்குத் தேர்வு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.