இங்கிலாந்தில் இந்திய அணியின் தோல்விக்கு பல காரணங்களில் முக்கியக் காரணமாக வீரர்களை உட்கார வைப்பது, பிறகு அணியில் சேர்ப்பது என்று மாறி மாறி செய்வதால் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக சில வீரர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர் என்று ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வீரர்களை மாற்றாமல் டிரெண்ட் பிரிட்ஜ் போட்டி அணையையே இறக்கியதே பெரிய செய்தியானதும் நினைவிருக்கலாம்.
விராட் கோலி கேப்டன், ரவிசாஸ்திரி தலைமைப் பயிற்சியாளர் ஆனதிலிருந்தே இத்தகைய போக்குகள் அணியைப் பாதித்து வருவதாக பலதரப்பினரும் விமர்சனம் செய்து வந்தனர்.
தென் ஆப்பிரிக்கா தொடரின் போது முதல் டெஸ்ட்டில் அபாரமாக பந்து வீசி பேட்டிங்கிலும் பங்களிப்பு செய்த புவனேஷ்வர் குமாரை அணியிலிருந்து நீக்கி அவருக்கும் ரசிகர்களுக்கும் அதிர்ச்சியளித்தது ரவிசாஸ்திரி-விராட் கோலி கூட்டணி. அந்த டெஸ்ட் போட்டியை இழந்தோம். இல்லையெனில் கோலி அடித்த சதத்துக்கு அந்தப் போட்டியில் வென்றிருக்கலாம் என்ற கருத்துகள் எழுந்தன.
இந்நிலையில் ஆங்கில ஊடகம் பெயர் குறிப்பிடாமல் வீரர்கள் சிலர் கூறுவதாக தெரிவித்திருப்பதாவது:
“தொடரின் ஆரம்பத்திலேயே, ’3 டெஸ்ட் போட்டிகளுக்கு அணியில் மாற்றமில்லை. சிறப்பாகப் பங்களியுங்கள்’ என்று கூறியிருந்தால் அது வேறு வகையான தன்னம்பிக்கையை அளிக்கும். கோலி நல்ல மனிதர், அணியிடமிருந்து சிறந்த பங்களிப்பை எதிர்நோக்குகிறார் சரி..அதற்காக வேண்டுமென்றே மாற்ற வேண்டிய தேவையில்லை. அப்படிச் செய்தால் ஒரு வீரருக்கு அவர் மீதே சந்தேகம் எழுகிறது. ஆனால் நாங்கள் இவ்வாறு நினைப்பது தவறுதான் ஆனால் நாங்களும் மனிதர்கள்தானே” என்று கூறப்பட்டுள்ளது.
அதேபோல் பேட்டிங் மீது மட்டும் விமர்சனங்கள் வருவதையடுத்து பந்து வீச்சு குறித்த விமர்சனத்தையும் வீரர் ஒருவர் முன்வைத்ததாக அதே செய்தியில் வெளியிட்டிருப்பதாவது:
தொடருக்கு முன்பே இங்கிலாந்தின் பின்வரிசை வீரர்கள் சிறப்பாக பேட்டிங் செய்வார்கள் என்பது தெரியும். ஆனால் ஒவ்வொரு போட்டியிலும் கீழ்வரிசை வீரர்களை ஆடவிட்டோம். முதல் 4 விக்கெட்டுகளை மலிவாக வீழ்த்தி விட்டால் வேலை ஓவர் என்ற மனநிலை ஏற்பட்டது. ஆகவே பவுலிங்கில் இன்னும் கொஞ்சம் திட்டமிடுதல் கவனம் ஆகியவை தேவை என்றே கருதுகிறேன் என பெயர் குறிப்பிடாத இன்னொரு வீரர் தெரிவித்துள்ளார்.