ஓய்வு எப்போது..? அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார் தினேஷ் கார்த்திக் !!

அடுத்த இரண்டு டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடுவது தான் தனது தற்போதைய இலக்கு என சீனியர் வீரரான தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

கடந்த 2004ம் ஆண்டு இந்திய அணியில் கால் பதித்த தமிழக வீரரான தினேஷ் கார்த்திக், தனது நேர்த்தியான பேட்டிங் மூலமும், சிறப்பான விக்கெட் கீப்பிங்கின் மூலமும் முன்னாள் வீரர்கள் பலரின் பாராட்டை பெற்றார். எதிர்கால இந்திய அணியின் மிக முக்கிய வீரராக தினேஷ் கார்த்திக் இருப்பார் என கருதப்பட்டது, ஆனால் அதே 2004ம் ஆண்டு இந்திய அணியில் கால் பதித்த தோனி வெகு சில போட்டிகளில் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்துவிட்டதன் மூலம், தினேஷ் கார்த்திக்கிற்கான வாய்ப்பு இந்திய அணியில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கப்பட்டது.

கடந்த 2007ம் ஆண்டு நடைபெற்ற டி.20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்த தினேஷ் கார்த்திக்கிறான வாய்ப்பு அடுத்தடுத்த தொடர்களில் மிக அரிதாகவே கிடைத்தது. கடைசியாக 2019ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருந்த தினேஷ் கார்த்திக், அதன்பிறகு இன்றுவரை ஒரு போட்டியில் கூட இடம் கிடைக்காமல் தவித்து வருகிறார்.

ஐபிஎல் டி.20 தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை ஒரு வருடம் வழிநடத்திய தினேஷ் கார்த்திக், அடுத்த வருடமே இயன் மோர்கனின் எண்ட்ரீயால் கொல்கத்தா அணியின் கேப்டன் பதவியையும் பறிகொடுத்துவிட்டு தற்போது தமிழ்நாடு அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.

தினேஷ் கார்த்திக்கிற்கு தற்போது 35வயது ஆகிவிட்டதாலும், இந்திய அணியில் அவருக்கான வாய்ப்பு இனி கிடைப்பது கஷ்டம் என்பதாலும் தினேஷ் கார்த்திக் விரைவில் ஓய்வை அறிவித்துவிடுவார் என அரசல் புரசலாக பேசப்பட்டு வரும் நிலையில், தினேஷ் கார்த்திக்கோ அடுத்த இரண்டு டி.20 உலகக்கோப்பையில் விளையாடுவதே தனது தற்போதைய இலக்கு என தெரிவித்துள்ளார். இதனால் தினேஷ் கார்த்திக் இன்னும் ஓரிரு வருடங்கள் ஓய்வை அறிவிக்க வாய்ப்பு இல்லை என்பது உறுதியாகியுள்ளது.

Mohamed:

This website uses cookies.