காயம் மற்றும் ஊக்கமருந்து எடுத்துக் கொண்டு 8 மாத கால தடையிலிருந்து மீண்டு வந்து மும்பைக்காக இன்று சையத் முஷ்டாக் அலி டி20 போட்டியில் ஆடிய பிரிதிவி ஷா 39 பந்துகளில் 63 ரன்கள் அடித்தார். மும்பை அணி அஸாம் அணியை 83 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
ஜெய் பிஸ்தாவுக்குப் பதிலாக ஆடிய பிரிதிவி ஷா அதிரடி அரைசதம் அடித்து, பிறகு ‘பேட்தான் பேசும்’ பாணியில் தன் அரைசதத்தை கொண்டாடினார்.
ஷாவும் ஆதித்ய தாரேவும் (48 பந்துகளில் 82) அஸாமின் ஒன்றுக்கும் உதவாத பவுலிங்கை சாத்தி எடுத்தனர், இதனால் மும்பை 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 206 ரன்கள் குவித்தது
பிறகு மும்பை மீடியம் வேகப்பந்து வீச்சாளர் ஷிவம் தபே (2/3) அபாரமாக வீச அஸாம் அணி 123/8 என்று படுதோல்வி அடைந்தது.
பிரிதிவி ஷா இறங்கியது முதலே தன் அதிரடி பாணியைக் கடைபிடித்து 7 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 39 பந்துகளில் 63 ரன்கள் விளாசினார், ஆனால் அதிர்ஷ்டம் இல்லாமல் இல்லை, 32 ரன்களில் அவருக்கு லாங் ஆஃபில் கேட்ச் விட்டனர்.
ஷாவின் ஷாட்கள் பிரமாதமாக அமைந்தன, இரண்டு டவரிங் சிக்சர்களையும் அவர் அடித்து அசத்தினார்.
தாரேவும் ஷாவும் இணைந்து 138 ரன்களை முதல் விக்கெட்டுக்காகச் சேர்த்து நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர். தாரே 12 பவுண்டரிகள் 1 சிக்சர் அடித்தார்.
14வது ஓவரில் அஸாம் லெக் ஸ்பின்னர் ரியான் பராக் என்பவர் தாரேயையும் கேப்டன் சூரிய குமார் யாதவ் (0) விக்கெட்டையும் அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்தினார்.
ஷாவும் ப்ராகின் 3வது விக்கெட்டாக வீழ்ந்த போது மும்பை 149/3 என்று ஆனது.
ஆனால் அதன் பிறகு மும்பையின் பினிஷராகக் கருதப்படும் சித்தேஷ் லாத் 14 பந்துகளில் 32 ரன்களை பறக்க விட்டார். இதனையடுத்து ஸ்கோர் 206 ரன்களுக்கு வந்தது.