இந்தியன் டீம்ல நீங்க இடம் கொடுக்கலன்னா என்ன, நான் அந்த கதவையே உடைக்கிறேன்.. ரஞ்சிக்கோப்பையில் 379 ரன்கள் விளாசி புதிய வரலாறு படைத்த பிரித்வி ஷா!

ரஞ்சிக்கோப்பையில் அஸ்ஸாம் அணிக்கு எதிராக 379 ரன்கள் அளித்து புதிய சாதனை படைத்திருக்கிறார் இளம் வீரர் பிரித்வி ஷா.

ரஞ்சிக்கோப்பை 2022/23 சீசன் நடைபெற்று வருகிறது. எலைட் பி பிரிவில் இடம்பெற்றுள்ள அசாம் மற்றும் மும்பை அணிகள் லீக் சுற்றில் விளையாடி வருகின்றன.

மும்பை அணிக்கு துவக்க வீரராக களமிறங்கிய பிரித்வி ஷா மற்றும் முஷீர் கான் இருவரும் முதல் விக்கெட்டுக்கு 123 ரன்கள் சேர்த்தனர். முஷீர் கான் 42 ரன்கள், அர்மான் ஜாபர் 27 ரன்களுக்கு அவுட்டாகினர்.

3வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த பிரித்வி ஷா மற்றும் அஜிங்கிய ரகானே இருவரும் 401 ரன்கள் சேர்த்தனர். இது ரஞ்சிக்கோப்பை வரலாற்றில் புதிய சாதனையாக இருக்கிறது.

300 ரன்களை கடந்து விளையாடி வந்த பிரித்வி ஷா 379 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். இவர் 49 பவுண்டரிகள் மற்றும் நான்கு சிக்ஸர்கள் அடித்துள்ளார். மும்பை அணிக்கு முச்சதம் அடித்த எட்டாவது வீரர் ஆவார்.

ரஞ்சிக் கோப்பை வரலாற்றில் அதிகபட்சமாக பி.பி.நிம்பல்கர் என்பவர் 400+ ரன்களை ஒரு இன்னிங்சில் அடித்துள்ளார். அது  தற்போதுவரை முறியடிக்காமல் இருக்கிறது.

பிசிசிஐ கதவை தட்டிவரும் பிரித்வி ஷா:

இந்திய அண்டர் 19 அணியில் கேப்டனாக இருந்த பிரித்வி ஷா 19 வயதில் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாகினார். நடுவில் காயம் மற்றும் சர்ச்சைகள் காரணமாக இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டார். அதன் பிறகு இவருக்கு போராட்டக் காலமாகவே இருந்திருக்கிறது.

காயத்திலிருந்து மீண்டு வந்து உள்ளூர் போட்டிகளில் அபாரமாக விளையாடி வருகிறார்  மும்பை அணிக்காக விளையாடி வரும் பிரித்வி ஷா, சையது முஸ்தக் அலி, விஜய் ஹசாரே மற்றும் ரஞ்சிக்கோப்பை என மூன்று விதமான போட்டிகளிலும் அபாரமாக செயல்பட்டு வருகிறார்

விஜய் ஹசாரே தொடரில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதும் தென்னாப்பிரிக்கா ஒருநாள் தொடர், நியூசிலாந்து  ஒரு நாள் தொடர், வங்கதேசம் ஒருநாள் தொடர், தற்போது இலங்கை அணியுடன் நடைபெற்று வரும் ஒருநாள் தொடர் என எதிலும் இவருக்கு வாய்ப்புகள் கொடுக்கப்படவில்லை.

ரஞ்சிகோப்பையில் அடித்த முச்சதத்தின் மூலம் உள்ளூர் கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை படைத்திருக்கிறார். அதாவது ரஞ்சிக்கோப்பையில் முச்சதம், விஜய் ஹசாரே தொடரில் இரட்டை சதம், சையது முஸ்தக் அலி தொடரில் சதம் அடித்த ஒரே வீரர் ஆவார்.

இத்தனை வருடம் பிசிசிஐ கதவை தட்டி வந்த பிரித்வி ஷா இனி உடைப்பதற்கு திட்டமிட்டு வருவதாக அவரது பேட்டிங் மூலம் தெரிகிறது. ரஞ்சிக்கோப்பையில் அடித்த மூச்சதத்திற்கு பிறகாவது, இந்திய அணிக்குள் இவரை தேர்வு செய்வது குறித்து பிச்சிஐ முடிவு செய்யுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Mohamed:

This website uses cookies.