ஐபிஎல் டி.20 தொடரில் இன்று நடைபெறும் இரண்டாவது குவாலிபயர் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதுகின்றன.
கடந்த மாதம் துவங்கிய ஐபிஎல் டி.20 தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. குவாலிபயர் போட்டியில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி நேரடியாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுவிட்ட நிலையில், எலிமினேட்டர் போட்டியில் வெற்றி பெற்ற ஹைதராபாத் அணியும், குவாலிபயர் போட்டியில் தோல்வியடைந்த டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் இன்று நடைபெறும் இரண்டாவது குவாலிபயர் போட்டியில் மோத உள்ளன.
அபுதாபியில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் குவாலிபையர் 2 ஆட்டத்தில் ஸ்ரேயாஷ் அய்யர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ்- வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.
டெல்லி அணி இதுவரை இறுதிப்போட்டிக்கு நுழைந்தது இல்லை. அந்த அணி முதன்முறையாக இறுதிப் போட்டிக்கு நுழையும் ஆர்வத்தில் உள்ளது.
டெல்லி அணி குவாலிபையர் 1 ஆட்டத்தில் மும்பை இந்தியன்சிடம் மிகவும் மோசமாக தோற்றது. அந்த அணியின் பேட்டிங்கும் பந்துவீச்சும் எடுபடவில்லை. இதை இன்றைய ஆட்டத்தில் சரிசெய்வது அவசியம் ஆகும்.
இந்த போட்டி தொடரில் டெல்லி அணி 2 முறை ஐதராபாத்திடம் தோற்றது. கடந்த 27-ந் தேதி துபாயில் நடந்த ஆட்டத்தில் 88 ரன் வித்தியாசத்திலும், செப்டம்பர் 29-ந் தேதி அபுதாபியில் நடந்த ஆட்டத்தில் 15 ரன் வித்தயாசத்திலும் தோற்றது.
இதற்கு டெல்லி அணி இன்று பதிலடி கொடுத்து இறுதிப்போட்டிக்கு நுழையுமா என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அணியின் கேப்டன் ஸ்ரேயாஷ், ஸ்டோனிஸ், தவான், ரிஷப்பண்ட், ரபடா, நோர்டியா, அக்சர் படேல் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.
ஐதராபாத் அணியின் பலமே பந்து வீச்சுதான். வேகப்பந்தில் தமிழக வீரர் டி.நடராஜன், சந்தீப் சர்மா, சுழற்பந்தில் ரஷீத்கான், சபாஷ் நதீம் ஆகியோர் முத்திரை பதித்து வருகிறார்கள்.
கேப்டன் வார்னர், வில்லியம்சன், மனிஷ் பாண்டே ஆகியோர் பேட்டிங்கில் சாதித்து வருகிறார்கள். ஜேசன் ஹோல்டர் ஆல்ரவுண்டர் வரிசையில் அந்த அணிக்கு மிகப்பெரிய பலமாக இருக்கிறார்.