விராத் கோலி டெஸ்ட் போட்டிகளில் இல்லாதபோது ரஹானே இந்திய அணியை வழிநடத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார் முன்னாள் துவக்க வீரர் வாசிம் ஜாபர்.
தென்னாப்பிரிக்கா அணியுடன் ஜோகன்னஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி காயம் காரணமாக விளையாடவில்லை. இதனால் துணை கேப்டனாக இருந்த கே எல் ராகுல் தற்காலிக கேப்டனாக விளையாடினார்.
இரண்டாவது இன்னிங்ஸ் வரை இந்திய அணியின் பக்கம் ஆட்டம் இருந்தது. நிர்ணயிக்கப்பட்ட 240 ரன்களுக்குள் தென்னாப்பிரிக்க அணியை கட்டுப்படுத்த முடியாமல், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் திணறினர். கேஎல் ராகுல் வேகப்பந்து வீச்சாளர்களை சரியாக பயன்படுத்தவில்லை. அதேநேரம் பீல்டிங் நிறுத்துவதும் சரியாக இல்லை என தொடர்ந்து விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இதன் காரணமாகவே இந்திய அணி வென்றெடுக்க வேண்டிய போட்டியில் தோல்வியை தழுவியது என்றும் கூறப்பட்டு வந்தன.
இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அனுபவ வீரர் ரஹானே கேப்டன் பொறுப்பில் நியமித்திருக்க வேண்டும். கேஎல் ராகுல் நியமனம் சரியான முடிவாக இல்லை. கேஎல் ராகுல் வெற்றியைப் பெற்றுத் தந்திருந்தாலும், இந்த முடிவில் தான் நான் இருந்திருப்பேன் என்று கருத்து தெரிவித்திருக்கிறார் முன்னாள் துவக்க வீரர் வாசிம் ஜாபர்.
அவர் கூறுகையில், “விராட் கோலி போன்ற அனுபவம் மிக்க வீரர் தற்காலிகமாக அணியில் இல்லாதபோது, எந்தவித தயக்கமில்லாமல் ரஹானேவை கேப்டனாக நியமிக்க வேண்டும். துணை கேப்டன் பதவியில் இருந்து அவரை நீக்கி விட்டால் என்ன? கேப்டனாக நியமிப்பதில் என்ன தயக்கம்?. இதற்கு முன்னர் அவர் கேப்டன் பொறுப்பில் இருந்தபோது, இந்திய அணி ஒரு டெஸ்ட் போட்டியிலும் தோல்வியைத் தழுவியது இல்லை. சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் தொடரை வென்று தந்திருக்கிறார். தனிப்பட்ட பேட்டிங்கை விட, கேப்டன் பொறுப்பில் அனுபவம் அணிக்கு முக்கியம். ஆகையால் ரஹானே கேப்டன் பொறுப்பில் எடுத்து வந்திருக்கவேண்டும்.
கேஎல் ராகுல் மீது எனக்கு தனிப்பட்ட வெறுப்பு விருப்பு எதுவும் இல்லை. இந்திய அணி தொடரை வெல்ல வேண்டும். அதுதான் முக்கியம். இது ஒரு நல்ல வாய்ப்பாக இந்திய அணிக்கு இருந்தது. அதை தற்காலிகமாக தவற விட்டு விட்டது என்று நான் உணர்கிறேன். அடுத்த போட்டியில் விராட் கோலி இல்லை என்றால், நிச்சயம் ரஹானேவை கேப்டனாக நியமிக்க வேண்டும் என்பதே எனது கோரிக்கை.” என தனது பேட்டியில் தெரிவித்தார்.