இந்தியா – இங்கிலாந்து – மேற்கிந்தியத் தீவுகளின் ஏ அணிகள் பங்குபெற்ற முத்தரப்பு ஒருநாள் போட்டியின் இறுதிச்சுற்று நேற்று நடைபெற்றது.
லண்டனில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய ஏ அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இங்கிலாந்து ஏ அணியின் ஹையின் 108, லிவிங்ஸ்டோன் 83 ரன்கள் எடுத்து நல்ல அடித்தளத்தை அமைத்தார்கள். இதனால் 34-வது ஓவரில் அந்த அணி 2 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் இருந்தது.
ஆனால் நடுவரிசை மற்றும் பின்வரிசை வீரர்கள் சொதப்பி இங்கிலாந்து ஏ அணிக்குப் பின்னடைவை ஏற்படுத்தித் தந்தார்கள். இந்திய ஏ அணியில் சஹார், கலீல் அகமது தலா 3 விக்கெட்டுகளும் தாக்குர் 2 விக்கெட்டுகளும் எடுத்து இங்கிலாந்தின் ரன் வேட்டையைத் தடுத்து நிறுத்தினார்கள். இதனால் இங்கிலாந்து ஏ அணி, 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 264 ரன்கள் எடுத்தது.
பேட்ஸ்மேன்கள் அனைவருமே பொறுப்புடன் விளையாடியதால் இலக்கை 48.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 267 ரன்கள் எடுத்து முத்தரப்புப் போட்டியை வென்றது இந்திய ஏ அணி. மயங்க் அகர்வால் 40, ஸ்ரேயஸ் ஐயர் 44, விஹாரி 37 ரன்கள் எடுத்து இந்திய அணியை வெற்றிப் பாதையில் பயணிக்க வைத்தார்கள். ரிஷப் பண்ட் 64, க்ருணால் பாண்டியா 34 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்கள்.
இந்திய ஏ அணியின் வெற்றி குறித்து பயிற்சியாளர் டிராவிட் கூறியதாவது: இந்தப் போட்டியில் மிகத் தரமான கிரிக்கெட்டை வெளிப்படுத்தியுள்ளோம். பலர் இந்த நாட்டில் முதல்முறையாக விளையாடுகிறார்கள். எனவே அனைவருக்கும் வாய்ப்புகள் கிடைக்கும்படி பார்த்துக்கொண்டோம்..
இந்தத் தொடரில் இந்திய தரப்பில் நான்கு சதம் அடிக்கப்பட்டிருக்கிறது. பிருத்வி ஷா, விஹாரி தலா ஒரு சதமும் மயங்க் அகர்வால் இரண்டு சதமும் அடித்துள்ளனர். நான்கு வீரர்களின் ஆவரேஜ் 50-க்கு மேல் உள்ளது. இந்த தொடருக்கு முன் நடந்த பயிற்சி ஆட்டத்தில் 4 விக்கெட் இழப்புக்கு 458 ரன்கள் குவித்தது இந்திய ஏ அணி. பந்துவீச்சில் தீபக் சாஹர் மொத்தம் 10 விக்கெட் வீழ்த்தியுள்ளார். தாகூர், அக்ஷர் படேல், கலீல் அகமது ஆகிய பந்துவீச்சாளர்களும் சிறப்பாகச் செயல்பட்டுள்ளனர்.
திறமையை வெளிப்படுத்தியுள்ள வீரர்கள் தற்போது இந்திய அணிக்குத் தேர்வாகியுள்ளார்கள். உலகக் கோப்பைக்கு இன்னும் ஒருவருடம் உள்ள நிலையில் மாற்று வீரர்கள் நிறைய பேர் உருவாகியுள்ளார்கள்.
இதில் விளையாடிய சிலருக்கு (தீபக் சாஹர், குணால் பாண்ட்யா, அக்ஷர் படேல்) தேசிய அணியில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. உலகக் கோப்பை போட்டி நெருங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் இப்படி இந்திய ஏ அணியும் பலம் வாய்ந்ததாக இருப்பது சிறப்பானது. அந்த அணியில் யாருக் கும் காயம் என்றால் இந்த வீரர்களை பயன்படுத்திக்கொள்ள முடியும்.
இந்திய ஏ அணியில் சிறந்த பந்துவீச்சாளர்களும் இருக்கிறார்கள். இது அரோக்கியமான அறிகுறிவீரர்களின் பங்களிப்பும் முன்னேற்றமும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது என்று கூறியுள்ளார்.