புயல் காரணமாக இந்தியா – பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி-20 போட்டி பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
கடந்த வாரம் உருவான ‘மஹா’ புயல் நகர்ந்து அரபிக் கடல் பகுதி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த புயல் கடந்த 2 நாட்களுக்கு முன் டையூவில் இருந்து தென்மேற்கே மையம் கொண்டிருந்தது. இது திடீரென திசை மாறி குஜராத் கடற்கரையை நோக்கி திரும்பும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அப்போது அதிதீவிர புயலாக மாறி 6 ஆம் தேதி நள்ளிரவு அல்லது 7 ஆம் தேதி காலையில் குஜராத்தில் கரையை கடக்கும் என்றும் இதனால் மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Photo by Prashant Bhoot / Sportzpics for BCCI
இதனால் இந்தியா- பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி-20 போட்டிக்கு பாதிப்பு வரும் என்று கூறப்படுகிறது. டெல்லியில் காற்று மாசு பிரச்னையோடு நடந்த முதலாவது டி-20 போட்டியில் பங்களாதேஷ் அணி வெற்றி பெற்றது. இரண்டாவது டி-20 போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் 7 ஆம் தேதி நடக்கிறது. புயல் காரணமாக 7 ஆம் தேதி பலத்த மழை பெய்யும் என்பதால், இந்தப் போட்டி பாதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
‘தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செய்து வருகிறோம். மைதானத்தை முழுவதுமாக மூடி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போட்டி சரியான நேரத்தில் தொடங்குவதற்கு ஏதுவாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது’ என்று சவுராஷ்ட்ரா கிரிக்கெட் சங்கத் தலைவர் ஜெயதேவ் ஷா தெரிவித்துள்ளார்.
முதல் டி20 தோல்விக்கு பிறகு இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா அளித்த பேட்டியில் கூறியதாவது:-
Photo by Deepak Malik / Sportzpics for BCCI
இந்த போட்டியில் வெற்றிக்கு தகுதியான முறையில் வங்காளதேச அணியினர் நன்றாக செயல்பட்டார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது. அவர்கள் தொடக்கம் முதலே சிறப்பாக பந்து வீசி நெருக்கடி அளித்ததுடன் விக்கெட்டும் வீழ்த்தினார்கள். 148 ரன்கள் வெற்றிக்கு போதுமான ஸ்கோர் தான். டி.ஆர்.எஸ். அப்பீலின் போது சில முடிவுகளை நாங்கள் தவறாக எடுத்து விட்டோம். மோசமான பீல்டிங்கும், அப்பீல் செய்கையில் சரியாக கணிக்காமல் செயல்பட்டதும் எங்கள் தோல்விக்கு காரணமாகும்.
பீல்டிங்கின் போது கேப்டன் சரியான இடத்தில் இல்லாத நேரத்தில் பந்து வீச்சாளர் மற்றும் விக்கெட் கீப்பர் சொல்வதை நம்பி தான் அப்பீல் செய்வது வழக்கமாகும். விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்ட் இளம் வீரர். அவருக்கு அதிக போட்டியில் ஆடிய அனுபவம் கிடையாது. அவர் முடிவுகளை சரியாக கணிக்க சற்று காலம் பிடிக்க தான் செய்யும். அதற்கு நாம் அவருக்கு காலஅவகாசம் அளிக்க வேண்டியது அவசியமானதாகும்.