‘அண்ணன்’ தோனியைப் போல இந்திய அணிக்கு குட்பை சொன்ன ‘தம்பி’ ரெய்னா!

முன்னாள் கேப்டன் தோனி ஓய்வு முடிவை அறிவித்த சில நிமிடங்களிலேயே தானும் ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார் சுரேஷ் ரெய்னா.

கடந்த சில வருடங்களுக்கு முன்பு இந்திய அணியின் தவிர்க்க முடியாத வீரராக இருந்து வந்தவர் சுரேஷ் ரெய்னா. பிறகு யோ-யோ உடல்தகுதி பரிசோதனை இந்திய அணியில் அவசியமாக்கப்பட்டது. அதில் உரிய தகுதி பெறாததால் சுரேஷ் ரெய்னாவிற்கு இந்திய அணியில் இடம் அளிக்கப்படவில்லை.

சுரேஷ் ரெய்னா கடைசியாக 2018 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் இடம் பெற்று ஆடினார். இரண்டு வருடங்களுக்கும் மேலாக இந்திய அணியில் இடம் கிடைக்காமல் தவித்து வந்தார்.

இந்த இடைப்பட்ட காலத்தில் உள்ளூர் டுவென்டி20 போட்டிகள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வந்த ரெய்னா ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காகவும் ஆடி வந்தார்.

இந்திய அணியிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலும் ரெய்னா மற்றும் தோனி இருவருக்கும் இடையேயான நட்பு அண்ணன் தம்பியை போன்றது என பலரும் தெரிவித்திருக்கின்றனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஆடிவரும் இவர்கள் இருவரும் தமிழகத்தின் செல்லப் பிள்ளைகளாகவே பார்க்கப்படுகின்றனர் எனக் கூறினால் சற்றும் மிகையாகாது.

இந்நிலையில் மகேந்திர சிங் தோனி ஓய்வு முடிவை இன்று அறிவித்தார். இதனை கேட்ட ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். தோனி ஓய்வு முடிவை அறிவித்த சில நிமிடங்களிலேயே சுரேஷ் ரெய்னாவும் ஓய்வு முடிவை அறிவித்து இருப்பது ரசிகர்களை மேலும் துயரத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்த சுரேஷ் ரெய்னா “தோனியுடன் எத்தனை ஆண்டுகள் ஆடியது மறக்க முடியாதது. தோனியின் வழியையே நானும் பின்பற்றுகிறேன். இந்தியாவிற்கு நன்றி. ஜெய்ஹிந்த்.” என குறிப்பிட்டு தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார்.

2005 ஆம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமான சுரேஷ் ரெய்னா சுமார் 13 ஆண்டுகள் இந்திய அணிக்காக விளையாடி இருக்கிறார். முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி 2004 ஆம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Prabhu Soundar:

This website uses cookies.