எனக்கு தெரிந்தது எல்லாம் கிரிக்கெட்.. கிரிக்கெட்.. கிரிக்கெட் மட்டும்தான்; உருக்கமான வீடியோ வெளியிட்ட சுரேஷ் ரெய்னா!
எனக்கு தெரிந்தது எல்லாம் கிரிக்கெட் மட்டும்தான்; எனது நரம்பு முழுவதும் கிரிக்கெட் மட்டும் தான் ஓடிக்கொண்டு இருக்கிறது என உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டு பேசியுள்ளார் சுரேஷ் ரெய்னா.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி யாரும் எதிர்பாராத நேரத்தில் திடீரென தனது ஓய்வு முடிவை அறிவித்தார். தோனி அறிவித்த சில நிமிடங்களிலேயே இந்திய வீரர் சுரேஷ் ரெய்னாவும் தான் தோனி வழியைத் தேர்வு செய்வதாக கூறி தனது ஓய்வு முடிவை அறிவித்தது இந்திய ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
ஓய்வு முடிவை அறிவித்த தருணத்தில் சுரேஷ் இதனால் எவ்வித விளக்கமும் அளிக்கவில்லை. இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் சுரேஷ்ரெய்னா. அதில் உருக்கமான கடிதத்தையும் பதிவிட்டிருக்கிறார்.
சுரேஷ் ரெய்னாவின் சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவில் கூறியதாவது:
ஒருவித கலவையான உணர்வுடன் நான் இந்த ஓய்வு முடிவை அறிவிக்கிறேன். சிறுவயதிலிருந்தே கிரிக்கெட்டுக்காக நான் பலவற்றை செய்திருக்கிறேன். எனக்கு தெரிந்ததெல்லாம் கிரிக்கெட் மட்டும் தான். எனது நரம்புகளில் இப்போது வரை கிரிக்கெட் மட்டுமே ஓடிக்கொண்டிருக்கிறது.
எனது இக்கட்டான சூழல்களில் குடும்பத்தினரும் குறிப்பாக மனைவி மற்றும் குழந்தைகளின் ஆதரவும் சகோதரர்கள் சகோதரிகளின் ஆதரவும் இல்லை என்றால் என்னால் இவ்வளவு தூரம் வந்திருக்க முடியாது. அதே நேரத்தில் எனது பயிற்சியாளர், உடல் தகுதி ஆலோசகர்கள் மற்றும் ட்ரெயினர்கள் ஆகியோர் இல்லை என்றால் இது சாத்தியமாகி இருக்காது.
இந்திய அணியில் இத்தனை காலம் நீடித்தது என்னுடன் பயணித்த பல வீரர்கள் எனக்கு அளித்த ஊக்கம் தான் காரணம். நான் ராகுல் டிராவிட், அனில் கும்ப்ளே, சச்சின், தோனி விராட் கோலி ஆகியோர் தலைமையில் ஆடி இருக்கிறேன் என நினைக்கும்போது அதிர்ஷ்டக்காரனாக உணருகிறேன்.
எனக்கு நண்பராகவும், எனக்கு ஒரு ஆலோசகராகவும் தோனி இருந்திருக்கிறார். அதேபோல இத்தனை ஆண்டுகாலம் எனக்கு ஆதரவாக இருந்த இந்திய கிரிக்கெட் அணி மற்றும் உத்தரப்பிரதேச கிரிக்கெட் சங்கத்திற்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.
கிரிக்கெட் பற்றிய கனவுகளுடன் இருந்த சிறுவனை இத்தனை தூரம் எடுத்துவந்து கனவை நனவாக்கியதற்கு மிக்க நன்றி. அனைத்திற்கும் மேலாக எனக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வந்த ரசிகர்களாகிய பலருக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.