அனைத்து போட்டிகளும் சென்னையில் தான் நடக்கும்! – ராஜீவ் சுக்லா மீண்டும் உறுதி

திட்டமிட்டப்படி, சென்னையில் அனைத்து ஐபிஎல் போட்டிகளும் நிச்சயம் நடக்கும்

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெறவுள்ள போட்டிக்கு எதிர்ப்புத் தெரிவித்து அரசியல் கட்சிகள், அமைப்புகள் அண்ணா சாலையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு பதட்டம் நிலவி வருகிறது. ஒட்டுமொத்த அண்ணா சாலையே முடங்கியுள்ளது. 4000 போலீசார்களின் பாதுகாப்பு, துணை கமாண்டோக்களின் பாதுகாப்புடன் இன்று இரவு போட்டி நடைபெற உள்ளது.

இந்த நிலையில், இன்று பேட்டியளித்த ஐபிஎல் சேர்மேன் ராஜீவ் சுக்லா, “விவசாயிகள் பிரச்சனைக்காக ஐபிஎல் போட்டிகளை இலக்காக வைப்பது ஏன்? காவிரியையும், ஐபிஎல்-லையும் தொடர்புப்படுத்தாதீர்கள். இதை அரசியல் ஆக்காதீர்கள். அரசியலுக்கு அப்பாற்பட்டு கிரிக்கெட் இருக்க வேண்டும். திட்டமிட்டப்படி, சென்னையில் அனைத்து ஐபிஎல் போட்டிகளும் நிச்சயம் நடக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, நேற்று பேட்டி அளித்த போதும், சென்னையில் இருந்து போட்டிகளை மாற்றும் எண்ணமே இல்லை. நிச்சயம் ஐபில் போட்டிகள் சென்னையில் நடக்கும் என்று ராஜீவ் சுக்லா தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி இன்றிரவு 8 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டியை சென்னை சேப்பாக்கத்தில் நடத்துவதற்கு பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வலுத்து வரும் சூழ்நிலையில் சென்னையில் ஐபிஎல் போட்டிகளை நடத்தக்கூடாது என தமிழக வாழ்வுரிமை கட்சியினர், தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை, மனிதநேய ஜனநாயக கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

இதையடுத்து ஐபிஎல் போட்டி நடைபெறும் சேப்பாக்கம் மைதானத்திற்கு சுமார் 4000-க்கும் அதிகமான காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அதிகமான போலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில் சென்னை அண்ணா சாலையில் நாம் தமிழர் கட்சியினர், எஸ்டிபிஐ கட்சியினர், தமிழக வாழ்வுரிமை கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு கட்சியினரும் , பல்வேறு இயக்கங்களை சார்ந்தவர்களும் ஐபிஎல் போட்டியை நடத்தக்கூடாது என பேரணியாகவும் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இந்நிலையில் அண்ணாசாலையில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் குண்டுகட்டாக தூக்கி அப்புறப்படுத்தினர். அதைத் தொடர்ந்து எஸ்டிபிஐ அமைப்பினர் போராட்டம் நடத்தினார்கள். அப்போது ஐபிஎல் டிக்கெட்டுக்களை எரித்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர் . தொடர்ந்து அண்ணாசாலையில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது

இதற்கிடையில் போராட்டத்தில் ஈடுபடுபவர்களை தொடர்ந்து போலீசார் கைது செய்யும் நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

Editor:

This website uses cookies.