உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடைபெறுவதற்கு முன் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே டெஸ்ட் தொடரை நடத்த வேண்டும் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ரமீஸ் ராஜா கூறியுள்ளார்.
இந்திய அணி தற்போது இங்கிலாந்து அணியுடன் டெஸ்ட், டி20, ஒருநாள் என மிகப்பெரிய தொடரில் விளையாடி வருகிறது. இதையடுத்து இந்திய அணி ஐபிஎல் தொடர் மற்றும் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. இதையடுத்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணியுடன் மோத இருக்கிறது.
இந்நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் சில டெஸ்ட் தொடர்கள் கொரோனா வைரஸ் காரணமாக நடத்தப்படவில்லை. இதனால் அணிகள் வெற்றி பெற்ற சதவீதங்கள் அடிப்படையில் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. அந்த வகையில் கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நடைபெற இருந்த டெஸ்ட் தொடர் நடத்தப்படவில்லை.
இதுகுறித்து தனியார் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்த பாகிஸ்தான் கேப்டன் ரமீஸ் ராஜா, “உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் முழுமையாக நடத்தப்படவில்லை. இறுதிப் போட்டி நடைபெற இன்னும் மூன்று மாதம் இருக்கிறது. அதற்கு முன் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நடத்தப்படாத அனைத்து டெஸ்ட் போட்டிகளையும் நடத்தி முடிக்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.
மேலும் தனது பாகிஸ்தான் அணி குறித்துப் பேசிய அவர் “ பாகிஸ்தான் அணி வெளிநாட்டு சுற்றுப் பயணத்தை தொடர்களில் தொடர்ச்சியாக மோசமாக விளையாடி வருகிறது. பாகிஸ்தான் அணி வெளிநாட்டு சுற்றுப் பயணத் தொடரை விளையாடுவதற்கு முன் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு தவறுகளை திருத்திக்கொள்ள வேண்டும். இதன் மூலமே வெற்றி பெற முடியும்” என்று கூறியிருக்கிறார்.