உலகக்கோப்பை தொடருக்கு பிறகு ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டனாக இளம் சுழற்பந்துவீச்சாளர் ரஷீத் கான் நியமிக்கப்பட்டுள்ளார்.
உலகக்கோப்பை தொடர் துவங்குவதற்கு ஒரு மாதம் முன்பாக, கேப்டன் பொறுப்பில் இருந்து வந்த மூத்த வீரர் அஸ்கர் ஆப்கான் நீக்கப்பட்டு, உலகக்கோப்பை தொடருக்கு புதிய கேப்டனாக குல்படின் நைப் நியமிக்கப்பட்டார். இது அணியில் இருந்த ரஷீத் கான், மூத்த வீரர் முகமது நபி இன்னும் சில வீரர்களுக்கு பிடிக்கவில்லை. அனுபவம் மிக்க வீரரை தூக்கிவிட்டு எப்படி முன் அனுபவம் இல்லாதவரை கேப்டனாக நியமிக்கலாம் என்கிற குற்றச்சாட்டும் தொடர்ந்து இருந்து வந்தது.
அதேபோல, வீரர்கள் தனது பேச்சை கேட்பதில்லை என்றும், முன்னுக்கு பின்னாக நடக்கிறார்கள் என்றும் குல்படின் நைப் குற்றச்சாட்டை முன்வைத்தார். இந்த சர்ச்சை உலகக்கோப்பை தொடரின் போதும் தொடர்ந்து நடந்துகொண்டே தான் இருந்தது. பின்னர், அஸ்கர் முன்வந்து, நமது கேப்டன் அவர்தான், அவரின் வழிநடத்தலில் தான் நாம் செல்ல வேண்டும் என கூறியபிறகு, அனைவரும் ஒத்துழைக்க துவங்கினர்.
உலகக்கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணி கத்துக்குட்டியாக செயல்படாமல், சிறப்பாகவே செயல்பட்டது. ஏறக்குறைய இந்தியாவை லீக் போட்டியில் வீழ்த்தியிருக்கும். பாகிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளும் ஆப்கானிஸ்தான் அணியிடம் தோல்வியை தழுவும் நிலைக்கு சென்று திரும்பியது. இவர்களின் செயல்பாடு அனைத்து தரப்பிலிருந்தும் பாராட்டை பெற்றது.
இந்த கேப்டன்ஷிப் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், அடுத்தடுத்த தொடர்களின் சிறப்பாக செயல்பட இளம் வீரர்களின் பங்களிப்பு அவசியம் என கருதியும் இன்று 20 வயதே ஆன இளம் சுழற்பந்துவீச்சாளர் ரஷீத் கானை ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் ஆகிய மூன்று வகையான போட்டிகளிலும் புதிய கேப்டனாக நியமித்துள்ளது ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம். இவருக்கு பக்கபலமாக இருக்க மூத்த வீரர் அஸ்கர் ஆப்கானை துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளது.