என்னுடைய திறமைகள் எனக்கு உதவுகிறது: ஆட்டநாயகன் ரசித் கான்!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.
முதலில் ஆடிய ராஜஸ்தான் 198/2 ரன்களை குவித்தது. அதன் வீரர் சஞ்சு சாம்சன் அபாரமாக ஆடி சதம் அடித்தது வீணானது. பின்னர் ஆடிய ஹைதராபாத் 1 ஓவர் மீதமிருக்கையில் 201/5 ரன்களை எடுத்து வென்றது. வார்னர் 69, பேர்ஸ்டோவ் 45 அபாரமாக ஆடி வெற்றிக்கு வித்திட்டனர்.
இரு அணிகளும் இதுவரை வெற்றிக் கணக்கை தொடங்காத நிலையில் வெள்ளிக்கிழமை இரவு ஹைதராபாத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் மோதின.
பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டத்தில் ஜோஸ் பட்லரை மன்கட் முறையில் அஸ்வின் ரன் அவுட் செய்ததால் தோல்வியை தழுவியது ராஜஸ்தான். அதே நேரத்தில் கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் அதிரடியாக ஆடியும் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது சன்ரைசர்ஸ். இந்நிலையில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
ராஜஸ்தான் தரப்பில் கேப்டன் ரஹானே, ஜோஸ் பட்லர் தொடக்க வரிசையில் களமிறங்கினர். முதல் ஆட்டத்தில் அபாரமாக ஆடிய பட்லர், 5 ரன்கள் எடுத்த நிலையில் ரஷித்கான் பந்தில் போல்டானார்.
பின்னர் வந்த சஞ்சு சாம்சன்-ரஹானே இணைந்து அதிரடி ஹைதராபாத் பந்துவீச்சை பதம் பார்த்தனர். இரண்டாவது விக்கெட்டுக்கு இருவரும் 50 ரன்களை சேர்த்தனர். 12-ஆவது ஓவர் முடிவில் ராஜஸ்தான் ஸ்கோர் 100-ஐ தாண்டியது.
ரஹானே அரைசதம்
ரஹானே 38 பந்துகளில் தனது 27-ஆவது ஐபிஎல் அரைசதத்தை கடந்தார்.  15-ஆவது ஓவர் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 122 ரன்களை எடுத்திருந்தது ராஜஸ்தான். 3 சிக்ஸர், 4 பவுண்டரியுடன் 49 பந்துகளில் 70 ரன்களை விளாசிய ரஹானே, ஷபாஸ் நதீம் பந்துவீச்சில் அவுட்டானார்.
சஞ்சு சாம்சன் சதம்
4 சிக்ஸர், 10 பவுண்டரியுடன் 55 பந்துகளில் 102 ரன்களை விளாசிய சஞ்சு சாம்சன் தனது இரண்டாவது ஐபிஎல் சதத்தை பதிவு செய்து அவுட்டாகாமல் இருந்தார். 3 பவுண்டரிகளுடன் 16 ரன்களை எடுத்த பென்ஸ்டோக்ஸýம் களத்தில் இருந்தார். 20 ஓவர்களில் 2 விக்கெட்டை மட்டுமே இழந்து 198 ரன்களை குவித்தது ராஜஸ்தான். ஹைதராபாத் தரப்பில் ரஷித்கான், நதீம் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.
ஹைதராபாத் வெற்றி
199 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஹைதராபாத் தரப்பில் டேவிட் வார்னர்-ஜானி பேர்ஸ்டோவ் ஆகியோர் தொடக்கம் முதலே ராஜஸ்தான் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர்.
வார்னர் விஸ்வரூபம்: 38-ஆவது அரைசதம்
தடைக்காலம் முடிந்து மீண்டும் ஆடத் தொடங்கியுள்ள டேவிட் வார்னர் 26 பந்துகளில் தனது 38-ஆவது ஐபிஎல் அரைசதத்தை பதிவு செய்தார். இதனால் 5.3 ஓவர்களிலேயே ஸ்கோர் 60-ஐ கடந்தது.
2 சிக்ஸர், 9 பவுண்டரியுடன் 37 பந்துகளில் 69 ரன்களை விளாசிய வார்னர், ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் அவுட்டானார். அவருக்கு பின் 1 சிக்ஸர், 6 பவுண்டரியுடன் 28 பந்துகளில் 45 ரன்களை விளாசிய பேர்ஸ்டோவ், ஷிரேயஸ் கோபால் பந்தில் வெளியேறினார். பின்னர் கேப்டன் கேன் வில்லியம்ஸன்-விஜய் சங்கர் நிலைத்து ஆடி ரன்களை சேர்த்தனர்.
விக்கெட்டுகள் சரிவு
கேன் வில்லியம்ஸன் 14 ரன்களுடன் உனதிகட் பந்தில் வெளியேறிய நிலையில், 35 ரன்களுடன் விஜய் சங்கரும், 1 ரன்னுடன் மணிஷ் பாண்டேவும் வெளியேறினர்.
யூசுப் பதான் 16, ரஷித் கான் 15 ரன்களுடன் அவுட்டாகாமல் தங்கள் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். 19-ஆவது ஓவரின் கடைசி பந்தில் சிக்ஸர் அடித்தார் ரஷித் கான். இறுதியில் 19 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 201 ரன்களை குவித்து ராஜஸ்தானை வென்றது ஹைதராபாத். ராஜஸ்தான் தரப்பில் ஷிரேயஸ் கோபால் 3-27, விக்கெட்டை வீழ்த்தினார்.

Sathish Kumar:

This website uses cookies.