ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 28 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.
இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி ஏற்கெனவே 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இழந்துவிட்டது. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான ஒரே 20 ஓவர் போட்டி பெர்மிங்ஹாமில் நடைபெற்றது
இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 221 ரன்கள் எடுத்தது அந்த அணியின் தொடக்க வீரர் பட்லர் அதிகபட்சமாக 30 பந்துகளில் 61 ரன்கள் எடுத்தார். ஜோ ரூட் 34 பந்துகளில் 49 ரன்கள் குவித்தார். 20 ஓவர்களில் முடிவில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 221 ரன்கள் எடுத்தது.
அடுத்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி 19.4 ஓவர்களில் 193 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தொடக்கத்தில் களமிறங்கிய கேப்டன் ஆரோன் ஃபின்ஞ் அதிரடியாக விளையாடி 41 பந்துகளில் 84 ரன்கள் எடுத்தார். ஆனால், சகவீரர்கள் யாரும் அவருக்கு துணை நின்று விளையாடாததால் ஆஸ்திரேலிய அணி தோல்வியைச் சந்தித்தது. இங்கிலாந்து அணியில் ஜோர்டான், ரஷீத் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இந்தத் தோல்வி மூலம், இந்தத் தொடரில் இங்கிலாந்து மண்ணில் ஒரு வெற்றியைக் கூட பெற முடியாமல் ஆஸ்திரேலிய அணி நாடு திரும்ப இருக்கிறது.
முன்னதாக ஒருநாள் தொடரின் மூன்றாவது ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 481 ரன்கள் எடுத்து உலக சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.