இதே தேதி… இதே மைதானம்! 39 ஆண்டுகளுக்கு முன்னர் இங்கு நான்,…. ரவி சாஸ்திரியின் சென்டிமென்ட்!

பிப்ரவரி 21ம் தேதி நாளை, வெள்ளிக்கிழமை இந்திய அணி விராட் கோலி தலைமையில், பயிற்சியாளர் ரவிசாஸ்திரி வழிநடத்துதலில் வெலிங்டனில் முதல் டெஸ்ட் போட்டியை ஆடுகிறது.

இதே பிப்.21-ம் தேதிதான் இன்றைய இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி வீரராக தன் முதல் டெஸ்ட் போட்டியில் இதே வெலிங்டனில் 1981-ம் ஆண்டு அறிமுகமானது குறிப்பிடத்தக்கது. அறிமுக இன்னிங்ஸிலேயே ரவி சாஸ்திரி 28 ஓவர் 9 மெய்டன் 54 ரன்கள் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அப்போது கவாஸ்கர் கேப்டன். பேட்டிங்கில் முதல் இன்னிங்சில் 3 நாட் அவுட். பிறகு நியூசிலாந்து அணி கபில்தேவின் அபாரப் பந்து வீச்சில் 2வது இன்னிங்ஸில் 100 ரன்களுக்கு நியூஸி. சுருண்ட போது சாஸ்திரி 3 ஓவர் 9 ரன்கள் 3 விக்கெட் என்று அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே 63 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். கடைசியில் இறங்கும் ரவி சாஸ்திரி 2வது இன்னிங்சில் 19 ரன்கள் எடுத்தார்.

இந்த டெஸ்ட் போட்டியில் 253 ரன்கள் வெற்றி இலக்கை கூட எட்ட முடியாமல் இந்திய அணி 190 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஹாட்லி, லான்ஸ் கெய்ன்ஸ், மார்ட்டின் ஸ்னெடன், ட்ரூப் ஆகியோர் கொண்ட அருமையான ஸ்விங் பவுலர்கள் நியூஸிலாந்தில் இருந்தனர். ஆனால் சந்தீப் பாட்டீல் அப்போதே கடினமான பவுலிங்கிற்கு எதிராக கடினமான பிட்சில் ஆக்ரோஷமாக ஆடக்கூடியவர் என்ற பெயர் பெற்றிருந்தார், அவர் முதல் இன்னிங்ஸ், இரண்டாவது இன்னிங்ஸ் இரண்டிலுமே முறையே 64 மற்ரும் 42 என்று அதிகபட்ச தனிப்பட்ட ஸ்கோரை எடுத்த இன்னிங்சை வானொலி வர்ணனையில் கேட்டதை மறக்க முடியாது.

ரவி சாஸ்திரி பிப்.21ம் தேதி வெலிங்டன் அறிமுகப் போட்டி குறித்து செண்ட்டிமெண்ட் ட்விட்டர் பதிவில், “போவதெல்லாம் வருவதன்றோ என்று கூறுவார்கள். நாளை இதே மைதானம், இதே நாள், நான் 39 ஆண்டுகளுக்கு முன்பாக டெஸ்ட் போட்டியில் அடியெடுத்து வைத்தேன். நம்ப முடியவில்லை. டெஸ்ட் கிரிக்கெட்டை நேசிக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

ரவிசாஸ்திரி 80 டெஸ்ட் போட்டிகள் 150 ஒருநாள் போட்டிகளில் ஆடினார். 1992-ல் இரண்டு வடிவங்களிலிருந்தும் ஓய்வு பெற்றார்.

Sathish Kumar:

This website uses cookies.