கிறைஸ்ட்சர்ச்சில் நாளை தொடங்கும் நியூஸிலாந்து அணிக்கு எதிரான 2-வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் எந்தெந்த வீரர்கள் இடம்பெற வாய்ப்புள்ளது குறித்து பயிற்சியாளர் ரவிசாஸ்திரி சூசகமாகத் தெரிவித்துள்ளார்.
இந்தியா-நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி மற்றும் 2-வது டெஸ்ட் போட்டி கிறைஸ்ட்சர்ச் நகரில் நாளை தொடங்குகிறது. வெலிங்டனில் நடந்த முதலாவது டெஸ்டில் 10 விக்கெட்டில் நியூஸிலாந்து அணி வென்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது.
இதில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் பிரிதிவி ஷா காயம் காரணமாகக் கடந்த சில நாட்களாகப் பயிற்சியில் ஈடுபடவில்லை. இதனால் 2-வது டெஸ்டில் பங்கேற்பாரா என்ற கேள்வி எழுந்தது. அதேபோல, விருதிமான் சஹாவுக்கு 2-வது டெஸ்டில் வாய்ப்பளிக்கப்படுமா என்பதும் தெரியவில்லை. கடந்த போட்டியில் அஸ்வின் ரன்கள் ஏதும் பெரிதாக அடிக்கவில்லை என்பதால், அவருக்குப் பதிலாக ஜடேஜாவுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்ற பேச்சும் இருக்கிறது.
இந்நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி இன்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தபோது கூறியதாவது:
நாளை தொடங்கும் போட்டியில் அஷ்வினைக் களமிறக்கலாமா அல்லது ஜடேஜாவுக்கு வாய்ப்பு அளிக்கலாமா என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. அஸ்வின் உலகத் தரம் வாய்ந்த சுழற்பந்துவீச்சாளர்தான். அதில் சந்தேகம் இல்லை. ஆனால், அவர் பேட்டிங்கில் இன்னும் கூடுதலாகக் கவனம் செலுத்துவது அவசியம். அஸ்வின் கடந்த காலங்களில் சிறப்பாகப் பந்துவீசியுள்ளார், அவரிடம் இருக்கும் வருந்தக்கூடிய விஷயம் அவரின் பேட்டிங், அதில் அவர் கவனம் செலுத்த வேண்டும். இருப்பினும் நாளை சூழலுக்கு ஏற்றார்போல் சரியான கலப்பில் அணித் தேர்வு இருக்கும்.
இந்தியாவில் நடக்கும் டெஸ்ட் போட்டிகளில் விருதிமான் சாஹாவுக்கு அதிகமான வாய்ப்புகள் வழங்கப்படும் ஏனென்றால், மைதானம் அதிகமான பிளவுகள் இருக்கும் என்பதால்,பந்துகள் நன்றாகச் சுழலும் அதனால், கீப்பிங் பணிக்கு சாஹா சரியாக இருப்பார்.
ஆனால், வெளிநாடுகளில் நடக்கும் போட்டிகளில் வேகப்பந்துவீச்சு அதிகமாக ஒத்துழைக்கும் ஆடுகளங்கள் இருக்கும். அதில் விக்கெட் கீப்பிங் செய்வதற்கு ரிஷப்பந்த சரியாக இருப்பார், அதுமட்டுமல்லாமல், கடைசி வரிசையில் பேட்டிங்கில் அடித்து ஆடுவதற்கு பேட்ஸ்மேன் தேவை என்பதால்தான் ரிஷப்பந்த் தேர்வு செய்யப்பட்டார்.
பிரிதிவி ஷாவுக்கு ஏற்பட்ட காயம் குணமாகிவிட்டது. அவர் நாளை களமிறங்கத் தயாராக இருக்கிறார். அவர் விளையாடுவதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. பும்ரா மீதும், ஷமி மீதும் எனக்கு அதிகமான நம்பிக்கை இருக்கிறது. நாளை தொடங்கும் போட்டியில் அவர்கள் நிச்சயம் 5 விக்கெட்டுகளை வீழ்த்துவார்கள்.
இவ்வாறு ரவி சாஸ்திரி தெரிவித்தார்