‘ரவி சாஸ்திரி வர்ணனையாளர் பணியை பார்க்கட்டும் : சேட்டன் சவுகான் ஆவேசம்

இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு ரவி சாஸ்திரி சரிபட்டுவரமாட்டார், ஆஸ்திரேலியத் தொடருக்கு முன் அவரை நீக்கிவிடுங்கள். அவருக்கு வர்ணனையாளர் பணிதான் பொருத்தமாக இருக்கும் என்று முன்னாள் வீரர் சேட்டன் சவுகான் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து பயணம் மேற்கொண்டிருந்த இந்திய அணி டெஸ்ட் தொடரை 4-1 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கிலும் இழந்தது. இந்தத் தோல்வியால் இந்திய அணி கடும் விமர்சனத்துக்கும், கண்டனத்துக்கும் ஆளானது.


இங்கிலாந்து தொடரில் இங்கிலாந்து அணியின் தொடக்க விக்கெட்டுகளை விரைவாக வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர்கள் கடைசியில் டெய்லண்டர் பேட்ஸ்மேன்களை வீழ்த்த முடியாமல் சிரமப்பட்டனர் என்ற விமர்சனமும், விராட் கோலி, ரஹானே, புஜாரா, ஆகியோரைத் தவிர மற்ற வீரர்கள் சரியாக பேட் செய்யவில்லை என்றும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.

ஆனால், இதற்குப் பதில் அளித்துப் பேசிய பயிற்சியாளர் ரவிசாஸ்திரி, கடந்த 20 ஆண்டுகளில் இப்போது விராட் கோலி தலைமையில் இருக்கும் இந்திய அணியே சிறந்த அணி, குறைந்த காலத்தில் பல வெற்றிகளைப் பெற்றுள்ளது என்று தெரிவித்தார். இந்தக் கருத்து மீதும் பல முன்னாள் வீரர்கள் விமர்சனத்தை வைத்தனர்.

இந்நிலையில் முன்னாள் இந்திய தொடக்க வீரரும், உ.பி. அரசின் விளையாட்டுத்துறை அமைச்சருமான சேட்டன் சவுகான் தான்பாட் நகரில் நேற்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

Ravi Shastri speaks to assembled media during the nets session at The Kia Oval, London. (Photo by Jonathan Brady/PA Images via Getty Images)

இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து ரவிசாஸ்திரியை ஆஸ்திரேலியத் தொடருக்கு முன்பாக நீக்கிவிடுங்கள். ரவி சாஸ்திரி நல்ல கிரிக்கெட் வர்ணனையாளர். அவர் அந்த பணியைச் செய்தால் போதுமானது, அந்த பணியைச் செய்ய அவரை அனுமதியுங்கள். இந்திய அணிக்குப் பயிற்சியாளர் பணிக்கு அவர் சரிபட்டுவரமாட்டார்.

இந்திய அணி சிறப்பாக விளையாட வேண்டும், இங்கிலாந்து தொடரில் இரு அணிகளுமே சமபலம் கொண்டதாக இருந்ததாகவே காணமுடிந்தது. ஆனால், இந்திய பந்துவீச்சாளர்கள் கடைசி நேரத்தில் இங்கிலாந்து டெய்லண்டர்களை வீழ்த்த முடியாமல் மிகுந்த சிரமப்பட்டனர். இந்தக் குறைபாட்டை களைய வேண்டும்.

இப்போதுள்ள இந்திய அணியைக் கடந்த 20 ஆண்டுகளில் சிறந்த அணி என்று ரவிசாஸ்திரி கூறியுள்ளார். இதைநான் ஏற்க மாட்டேன். என்னைப் பொருத்தவரை கடந்த 1980களில் இருந்த இந்திய அணிதான் எப்போதுமே சிறப்பான அணியாக இருக்க முடியும். வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு வெற்றிகளையும் பெற்றுத் திரும்பியது.

ஆசியக்கோப்பைக்கு தேர்வு செய்யப்பட்ட இந்திய அணியில் அனுபவம் மிகுந்த வீரர்களும், புதியரத்தம் பாய்ச்சப்பட்ட இளம் வீரர்களும் கொண்ட கலவையாக இருப்பதால், கோப்பையைவெல்லும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

இவ்வாறு சேட்டன் சவுகான் தெரிவித்தார்.

இந்திய அணியில் கடந்த 1969 முதல் 1981-ம் ஆண்டுவரை இடம் பெற்ற சேட்டன் சவுகன், 40 டெஸ்ட் போட்டிகளி்ல விளையாடி, 2,084 ரன்கள் சேர்த்துள்ளார். கடந்த 1969-ம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிராகமும்பையில் நடந்த போட்டியில் சேட்டன் சவுகன் அறிமுகமாகினார். அதன்பின் 1981 ஆண்டு ஆக்லாந்தில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான போட்டியோடு ஓய்வு பெற்றார். சிறந்த டெஸ்ட் வீரரான சேட்டன் சவுகான் 7 ஒரு நாள் போட்டிகள் மட்டுமே விளையாடியுள்ளார்.

ரவிசாஸ்திரியை பயிற்சியாளர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் சவுரவ் கங்குலி, வீரேந்திர சேவாக் ஆகியோர் வலியுறுத்திய நிலையில், இப்போது சேட்டன் சேவாக்கும் குரல் எழுப்பியுள்ளார்.

Vignesh G:

This website uses cookies.