எனது அதிரடி ஆட்டத்திற்கு இவர் தான் காரணம்; ரகசியத்தை உடைத்த ஷர்துல் தாகூர்
இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி கட்டாக்கில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் 315 ரன்கள் குவித்தது.
பின்னர் 316 ரன்கள் அடித்து சேஸிங் செய்தால்தான் தொடரை கைப்பற்ற முடியும் என்ற நிலையில் இந்தியா களம் இறங்கியது. தொடக்க வீரர்களான ரோகித் சர்மா (63), கேஎல் ராகுல் (77) ஆகியோர் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர்.
ஷ்ரேயாஸ் அய்யர் (7), ரிஷப் பந்த் (7), கேதர் ஜாதவ் (9) சொற்ப ரன்களில் வெளியேறியதால் நெருக்கடி ஏற்பட்டது.
ஜடேஜாவுடன் இணைந்து விராட் கோலி அணியை வெற்றி நோக்கி அழைத்துச் சென்றார். ஆனால் 85 ரன்கள் சேர்த்த நிலையில் விராட் கோலி ஆட்டமிழந்தார். அப்போது இந்தியா 46.1 ஓவரில் 286 ரன்கள் எடுத்திருந்தது.
இந்தியாவின் வெற்றிக்கு 23 பந்தில் 30 ரன்கள் தேவைப்பட்டது. அந்த நேரத்தில் ஜடேஜா உடன் ஷர்துல் தாகூர் ஜோடி சேர்ந்தார். ஜடேஜா அதிரடி ஃபார்மில் இருந்தார். ஷர்துல் தாகூர் ஜடேஜாவுடன் இணைந்து அணிக்கு வெற்றியை தேடிக்கொடுப்பாரா? என்ற ஏக்கம் ரசிகர்களிடம் தொற்றிக் கொண்டிருந்த நிலையில் அடுத்த பந்தை சிறப்பாக விளையாடி பவுண்டரிக்கு விரட்டினார். இதனால் இந்திய ரசிகர்களுக்கு நம்பிக்கை பிறந்தது. அதன்பின் 6 பந்தில் 17 ரன்கள் விளாசி அணியை வெற்றி பெற வைத்தார்.
அவர் களம் இறங்கும்போது நடந்தது என்ன என்பதை விவரித்துள்ளார் ஷர்துல் தாகூர். இதுகுறித்து ஷர்துல் தாகூர் கூறுகையில் ‘‘நான் பேட்டிங் செய்ய வரும்போது ரவி சாஸ்திரி சார் என்னிடம், பொறுப்பை ஏற்றுக் கொண்டு போட்டியை முடித்துவிட்டு வாருங்கள். அந்த திறமை உங்களிடம் இருக்கிறது என்றார்.
நான் மைதானத்திற்குள் வரும்போது, விராட் கோலி என்னிடம் ஜடேஜா அடித்து விளையாடும்படி நீங்கள் ஒரு ரன் எடுத்துக் கொடுத்தால் சிறந்ததாக இருக்கும் என்றார்.
ஆனால் எனக்கு அதிர்ஷ்டம் இருந்ததால் முதல் பந்தே என்னுடைய மிடில் பேட்டில் பட்டது. ஜடேஜா என்னிடம் பனியின் தாக்கம் உள்ளது. பந்து பேட்டிற்கு சிறந்த முறையில் வருகிறது என்றார். நான் முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய பின்னர், தேவையான் ரன்ரேட் குறைந்ததால், ஜடேஜா மீதான நெருக்கடி குறைய ஆரம்பித்தது.
நான் ஏற்கனவே ஐபிஎல் தொடரில் இதுபோன்று போட்டியை முடித்திருக்கிறேன். அது எனக்கு உதவியாக இருந்தது’’ என்றார்.
———–