உங்களுக்கு யார் இந்த அதிகாரம் கொடுத்தது; புதிய சர்ச்சையில் சிக்கிய அஸ்வின்
வெள்ளிக்கிழமையான இன்று பெங்களூருவில் கர்நாடகா அணிக்கு எதிராக நடந்த விஜய் ஹஜாரே இறுதிப் போட்டியில் பேட்டிங்கில் களமிறங்கிய அஸ்வின் பிசிசிஐ ஹெல்மெட் விதிகளை மீறியதாகச் சர்ச்சை எழுந்துள்ளது.
இன்று தொடக்க வீரர் முரளி விஜய் ஆட்டமிழந்தவுடன் 3ம் நிலையில் அஸ்வின் களமிறங்கும் போது பிசிசிஐ லோகோ உள்ள ஹெல்மெட்டுடன் இறங்கினார், இது விதிமீறல் ஆகும். ஏனெனில் இந்திய அணி ஹெல்மெட்டைப் பயன்படுத்தினால் பிசிசிஐ லோகோவை மறைத்துத்தான் பயன்படுத்த வேண்டும் என்பது பிசிசிஐ உடை விதிமுறைகளின் ஓர் அங்கமாகும்.
இதனை அஸ்வின் மீறி டேப் ஒட்டாமல் பிசிசிஐ லோகோ ஹெல்மெட்டுடன் இறங்கியுள்ளதால் அவருக்கு அபராதம் விதிக்கப்படலாம் என்று தெரிகிறது.
பொதுவாக பின்னால் களமிறங்கும் அஸ்வின் இன்று 3ம் நிலையில் இறக்கப்பட்ட தமிழக அணியின் முடிவும் பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது, ஆனால் அது பயனளிக்கவில்லை 8 ரன்களில் அவர் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இந்நிலையில் பிசிசிஐ லோகோ ஹெல்மெட் பற்றி பிசிசிஐ தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது, “இந்திய அணிக்கு ஆடும் பிசிசிஐ ஹெல்மெட்களை பிற ஆட்டங்களில் பயன்படுத்தும் போது லோகோவை டேப் ஒட்டி மறைக்க வேண்டும் என்பது விதிமுறை. இல்லையெனில் ஆட்ட நடுவர் அவருக்கு அபராதம் விதிக்க முடியும். இந்த விதிமுறைகள் குறித்து வீரர்களுக்கு ஏற்கெனவே விளக்கப்பட்டுள்ளது, ஆகவே இந்த விதிமுறைகளை மீறும் வீரர்களுக்கு அபராதம் விதிக்க முடியும்” என்றார்.
மயங்க் அகர்வால் இந்திய அணிக்கு ஆடும்போது பயன்படுத்தும் பிசிசிஐ ஹெல்மெட்டைத்தான் பயன்படுத்தினார், ஆனால் லோகோ மீது டேப் ஒட்டப்பட்டிருந்தது. கே.எல்.ராகுல் பயன்படுத்திய ஹெல்மெட்டில் எந்த ஒரு லோகோவும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கர்நாடக அணி மிதுனின் ஹாட்ரிக்குடன் விஜய் ஹசாரே டிராபியைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.