பந்துவீச்சாளர்களுக்கான டெஸ்ட் தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்திருக்கிறார் ரவிச்சந்திரன் அஸ்வின். கடந்த வாரம் முதலிடம் பிடித்த ஜேம்ஸ் ஆண்டர்சனை பின்னுக்கு தள்ளி இந்த சாதனை படைத்திருக்கிறார்.
நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் மிகச்சிறந்த ஃபார்மில் இருந்து வரும் ரவிச்சந்திரன் அஸ்வின் பேட்டிங்கில் ஓரளவிற்கு பங்களிப்பை கொடுத்து வந்தாலும் பந்துவீச்சில் எதிரணிக்கு சிம்ம சொப்பனமாக விளங்கி வருகிறார்.
முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் மொத்தம் 14 விக்கெட்டுகளை கைப்பற்றி பல்வேறு சாதனைகளை படைத்தார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 100 டெஸ்ட் விக்கெட்டுகளை கைப்பற்றிய இரண்டாவது இந்திய பவுலர் எனும் புதிய ரெக்கார்ட் படைத்தார்.
கடந்த வாரம் வெளியான டெஸ்ட் பந்துவீச்சு தரவரிசை பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு அஸ்வின் முன்னேறினார். இங்கிலாந்து அணியின் லெஜன்ட் ஜேம்ஸ் ஆண்டர்சன் நியூசிலாந்து அணிக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டியில் அபாரமாக பந்துவீசி அசத்தியதால், நீண்டகாலத்திற்கு பின் முதல் இடத்தை பிடித்தார்.
இந்த வாரம் ஜேம்ஸ் ஆண்டர்சன் 859 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறார். ரவிச்சந்திரன் அஸ்வின் 864 புள்ளிகளுடன் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார். சுமார் 8 வருடங்களுக்கு பிறகு, டெஸ்ட் பவுலர்கள் தரவரிசையில் மீண்டும் முதலிடத்திற்கு வந்திருக்கிறார் அஸ்வின்.
795 புள்ளிகளுடன் நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளார் ஜஸ்பிரித் பும்ரா. இதே பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரில் அசத்தி வரும் ரவீந்திர ஜடேஜா எட்டாவது இடத்திற்கு முன்னேறி உள்ளார்.
ஆல்ரவுண்டர் தரவரிசையில் ரவீந்திர ஜடேஜா 460 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறார். ரவிச்சந்திரன் அஸ்வின் 376 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், அக்சர் பட்டேல் 283 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திலும் இருக்கின்றனர்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் பேட்டிங் தரவரிசையை பொருத்தவரை, ரிஷப் பன்ட் மற்றும் ரோஹித் சர்மா இருவரும் தலா இரண்டு இடங்கள் பின்தங்கி ஏழாவது மற்றும் எட்டாவது இடங்கள் முறையே உள்ளனர். விராட் கோலி, 665 புள்ளிகளுடம் 17வது இடத்தில் இருக்கிறார்.
அணிகளுக்கான டெஸ்ட் தரவரிசையில், இந்திய அணி முதல் இடத்தில் இருக்கிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றால், நிரந்தரமாக முதலிடத்தை பெறலாம். இப்போட்டியில் ஆஸ்திரேலியா அணி டிரா அல்லது வெற்றியைப் பெற்றால் மீண்டும் முதலிடத்திற்கு வருவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன.