நியூசிலாந்து மீதான கோவத்தை வெளிப்படுத்திய அஸ்வின்; சதம் அடித்து அசத்தல்
நடந்து முடிந்த ‘ஒயிட்வாஷ்’ நியூஸிலாந்து டெஸ்ட் தொடரில் நன்றாக பவுலிங் செய்த அஸ்வின் வேகப்பந்து வீச்சு ஆட்டக்களத்தில் 3விக்கெட்டுகளையே ஒரு டெஸ்ட் போட்டியில் கைப்பற்றினார், ஆனால் அவர் ஒரு நம்பகமான கீழ்வரிசை பேட்ஸ்மென் என்பதற்கு மாறாக 0,4 என்று ஆட்டமிழந்தார்.
இதனையடுத்து 2வது டெஸ்ட் போட்டியில் அவர் நீக்கப்பட்டு ஜடேஜா சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தனது பேட்டிங் பார்மை மீட்கும் விதமாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்க முதல் டிவிஷன் லீக் போட்டியில் ஞாயிறன்று ஆழ்வார்பேட் அணிக்கு எதிராக 13 பவுண்டரிகள் ஒரு சிக்சருடன் 180 பந்துகளில் 102 ரன்கள் எடுக்க இவரது அணியான எம்.ஆர்.சி.-ஏ அணி முதல் நாள் ஆட்டத்தில் 346 ரன்களை எடுத்துள்ளது.
மேலும் ஆர்.சீனிவாசன் என்ற வீரருடன் சதக்கூட்டணியும் அமைத்தார் அஸ்வின். சீனிவாசன் 87 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது.
அஸ்வின் டெஸ்ட் போட்டிகளில் அவ்வளவு மோசமான பேட்ஸ்மென் அல்ல, என்பதோடு அவரது ஆட்ட முறை, சில ஷாட்களை விவிஎஸ் லஷ்மணோடு வர்ணனையாளர்கள் ஒப்பிடுவதை பலரும் கேட்டிருக்கலாம்.
44 டெஸ்ட் போட்டிகளில் அஸ்வின் 1816 ரன்களை 34.92 என்ற சராசரியில் 4 சதங்கள், 10 அரைசதங்களுடன் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆனால் கடந்த 2017 முதலே அவரது பேட்டிங் பார்ம் சரிவு கண்டது. 27 டெஸ்ட் போட்டிகளில் அவரது சராசரி 17.36 ஆக உள்ளது, ஒரேயொரு அரைசதம் எடுத்துள்ளார்.
முதலில் தான் அடித்து ஆடும் நோக்கத்துடன் ஆடியதால் பேட்டிங் கைகூடியதாகவும் பிற்பாடு விக்கெட்டை இழக்கக் கூடாது என்ற கூடுதல் கவனம் ஆட்சி செலுத்தியதால் தன்னால் தன் பாணியில் ஆட முடியவில்லை என்றும் வெலிங்டன் டெஸ்ட் போட்டி முடிந்தவுடன் அஸ்வின் கூறியது குறிப்பிடத்தக்கது.