இதை வச்சுதானே ரொம்ப ஆடுன.. இனி என்ன பண்ணுவ?; ஐபிஎல் கேப்டனை வம்பிழுத்த அஸ்வின்!
டிக்டாக் செயலியை தடை செய்ததன் எதிரொலியாக, ட்விட்டரில் வார்னரை கிண்டலடித்துள்ளார் தமிழக வீரர் அஸ்வின்.
கொரோனா வைரஸ் உலகெங்கிலும் பரவி, பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருவதால் கடந்த மார்ச் மாதம் இறுதியில் இருந்து அனைத்து பகுதிகளிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கு காலங்களில் எவ்வித போட்டியும் நடக்காததால் வீரர்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டுவிட்டது.
கிரிக்கெட் போட்டிகள் இல்லாத காலத்தில் ரசிகர்களுடன் நேரடி தொடர்பில் இருக்க சமூக வலைதளங்களை பயன்படுத்தி, அதில் வீரர்கள் நேரலையில் உரையாடுகின்றனர்.
இது ஒருபுறமிருக்க ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் டேவிட் வார்னர் டிக்டாக் செயலியில் குதித்து குடும்பத்துடன் கும்மாளம் அடித்துவந்தார். குறிப்பாக தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிப்படங்களில் பிரபல வசனங்களை எடுத்து பேசியும் பிரபல பாடல்களுக்கு ஆட்டம் போட்டும் வீடியோ வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வந்தார். இவரிடன் வீடியோக்களை பார்க்க தனி பட்டாளமே இருந்து வந்தது.
இந்நிலையில் இந்தியாவில் பாதுகாப்பு கருதி, சீனாவை மையமாகக் கொண்டு இயங்கி வரும் சுமார் 56 செயலிகளை மத்திய அரசு தடை செய்தது. அதில் முதன்மையாக இருப்பது டிக்டாக் செயலி ஆகும்.
டிக்டாக் இல்லாமல் இனி வார்னர் எப்படி இருப்பார்? என பலரும் சமூக வலைதளங்களில் கிண்டல் அடிக்கின்றனர். இதற்கிடையில், இந்திய வீரர் அஸ்வின் தனக்கென பிரத்தியேக பாணியில் வார்னரை கலாய்த்துள்ளார்.
இந்த விஷயத்தை வேடிக்கையாக உலகிற்கு சொல்லும் விதமாக “அப்போ அன்வர்?” என டேவிட் வார்னரை வம்பிழுத்துள்ளார். இந்த வசனமானது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பாஷா திரைப்படத்த்தில் இடம்பெற்றதாகும். தனது நண்பர் பாஷா இனி என்ன செய்வார்? என மாணிக்கம் ரஜினி கேட்கும் வண்ணம் அமைந்திருக்கும்.