ஜடேஜாவுக்கு பர்மிஷன் கொடுத்த பிசிசிஐ; ஆஸி., டெஸ்ட் தொடரில் ஆடுவாரா? இப்போது என்ன ஆயிற்று? – ரிப்போர்ட்!

பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் ஜடேஜா ஆடுவாரா? மாட்டாரா? என்கிற சந்தேகங்களுக்கு பதில் கிடைத்திருக்கிறது.

வருகிற பிப்ரவரி ஒன்பதாம் தேதி இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் துவங்க உள்ளது. இதில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலியா அணி பெங்களூருக்கு கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி வந்துவிட்டனர். வந்த அடுத்த நாளில் பயிற்சியையும் துவங்கி விட்டனர்.

பயிற்சியின் போது இந்திய மைதானங்களுக்காக பல்வேறு நுணுக்கங்களை அவர்கள் செய்து வருவதாகவும், கடந்த மூன்று முறை பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரை இழந்துவிட்டதால், இம்முறை கட்டாயம் வென்றாக வேண்டும் என்ற முனைப்பிலும் இருக்கின்றனர்.

அதேநேரம் இந்திய அணியினர் இந்த தொடரை கட்டாயம் கைப்பற்றியாக வேண்டும். ஏனெனில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கும் இந்திய அணி அதை தக்கவைத்து இறுதி போட்டிக்கு முன்னேற இந்த வெற்றி அவசியமாகும்.

கடந்த ஜனவரி மாதம் முதல் வாரத்தில் இந்த ஆஸி., டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டது. அதில் ஜடேஜாவின் பெயரும் இடம் பெற்றிருந்தது. கூடுதலாக ஜடேஜா உடல்தகுதியை பொறுத்து இந்த தேர்வு மாற்றப்படலாம் என்கிற அறிவிப்பும் இருந்தது.

2022 செப்டம்பர் மாதம் முதல் ஜடேஜா காயம் காரணமாக சர்வதேச போட்டிகளில் விளையாட முடியாமல் இருந்தார். ஜடேஜா, கால் மூட்டு பகுதியில் அறுவை சிகிச்சை மேற்கொண்டு, இந்திய தேசிய அகடமியில் தீவிர பயிற்சியிலும் ஈடுபட்டு வந்தார்.

2022 டிசம்பர் மாதம் குணமடைந்துவிட்டார். ஆனாலும் பிசிசிஐ அவசரம் காட்டாமல் பொறுமையுடன் கூடுதல் ஓய்விற்கு அனுமதித்தது. மேலும் இந்த பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாட வேண்டும் என்றால் உள்ளூர் போட்டிகளில் விளையாடி உடல் தகுதியை நிரூபிக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தது.

இதன் அடிப்படையில் ரஞ்சிக்கோப்பை தொடரில் சவுராஷ்டிரா அணிக்காக விளையாடிய ஜடேஜா, தமிழ்நாடு அணிக்கு எதிராக சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுகள், இரண்டாவது இன்னிங்ஸில் ஒரு விக்கெட் என அசத்தினார். மேலும் பேட்டிங்கில் 15 ரன்கள் மற்றும் 25 ரன்கள் முறையே இரண்டு இன்னிங்சிலும் அடித்தார் வழக்கம்போல ஃபீல்டிங்கிலும் அசத்தினார்.

 

அனைத்து விதத்திலும் நன்றாக செயல்பட்டதால் பார்டர் கவாஸ்கர் தொடரில் பங்கேற்பதற்கு பிசிசிஐ அனுமதித்திருக்கிறது. நாக்பூர் மைதானத்தில் சக இந்திய வீரர்களுடன் இவர் பயிற்சி செய்த புகைப்படங்களை பிசிசிஐ தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டது.

Mohamed:

This website uses cookies.