மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறினார் ரவீந்திர ஜடேஜா… டெஸ்ட் போட்டிகளுக்கான புதிய தரவரிசை பட்டியல் வெளியீடு !!

சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை ஐசிசி., இன்று வெளியிட்டுள்ளது.

சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் சிறந்து விளங்கும் ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசை பட்டியலில், இந்திய அணியின் ரவீந்திர ஜடேஜா மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். முதல் இடத்தில் இருந்து விண்டீஸ் அணியின் ஜேசன் ஹோல்டரை பின்னுக்கு தள்ளி ஜடேஜா மீண்டும் தனது முதலிடத்தை பிடித்துள்ளார்.

பந்துவீச்சு, பேட்டிங் என இரண்டிலும் தொடர்ந்து மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ரவீந்திர ஜடேஜா, சமீபத்தில் நடந்து முடிந்த இலங்கை அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 175* ரன்கள் குவித்தோடு, அதே போட்டியில் 9 விக்கெட்டுகளும் வீழ்த்தி அசத்தினார். இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ரவீந்திர ஜடேஜா சொல்லிக்கொள்ளும் அளவிற்கு விளையாடவில்லை, ஆனால் இந்திய அணி இரண்டு போட்டியிலும் அபார வெற்றி பெற்று தொடரை முழுமையாக வென்றது.

கடந்த வாரத்தில் ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசையில் முதலிடத்தில் இருந்த விண்டீஸ் அணியின் ஜேசன் ஹோல்டர், இங்கிலாந்து அணியுடனான நடப்பு டெஸ்ட் தொடரில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு விளையாடாததால் முதல் இடத்தை ரவீந்திர ஜடேஜாவிடம் பறிகொடுத்துள்ளார். ரவீந்திர ஜடேஜா 385 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ஹோல்டர் 357 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.

பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவிச்சாளர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலில் பெரிதாக மாற்றம் எதுவும் இல்லை.

Mohamed:

This website uses cookies.