தோனி ரசிகர்களால் நான் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகிறேன் என்று ட்விட்டர் பக்கத்தில் சூசகமாக குறிப்பிட்டுள்ளார் ரவீந்திர ஜடேஜா.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 2010 ஆண்டிலிருந்து பயணித்து வரும் ரவீந்திர ஜடேஜா, இந்த வருடம் அனைத்து மைதானத்திலும் வித்தியாசமான பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்.
வழக்கமாக சிஎஸ்கே அணிக்கு கீழ் வரிசையில் களமிறங்கி மிகச்சிறந்த பங்களிப்பை கொடுத்து வரும் ஜடேஜா இந்த வருடம் விரைவாக ஆட்டமிழக்க வேண்டும் என்று ரசிகர்களே விரும்புகின்றனர். இதற்குக் காரணம் கேப்டன் மகேந்திர சிங் தோனியை களத்தில் பார்க்கலாம் என்று ரசிகர்கள் மத்தியில் நிலவும் எதிர்பார்ப்பது தான்.
தோனிக்கு இதுதான் கடைசி சீசன் என்றும் பரவலாக பேசப்பட்டு வருகிறது. சொந்த மைதானத்தில் மட்டுமல்ல வெளிமைதானங்களிலும் ஜடேஜா விரைவாக அவுட் ஆக வேண்டும் என்றும் கருதி வருகின்றனர். அப்போதுதான் தோனியை களத்தில் காணலாம் என்று நினைக்கின்றனர். இதை ஜடேஜா அவுட்டானப்பின் எழுப்பப்பட்டு வரும் கரகோஷத்தில் இருந்து புரிந்து கொள்ளலாம்.
இதற்கு மத்தியிலும் அபாரமாக செயல்பட்டு மூன்று முறை ஆட்டநாயகன் விருது பெற்றுக் கொடுத்திருக்கிறார். குறைந்த ஸ்கோர் அடித்து வரும் மைதானங்களில், தனது சுழற்பந்துவீச்சால் மிக முக்கிய பங்காற்றி வருகிறார்.
இந்நிலையில் ஜடேஜாவுக்கு ஆதரவாக சிஎஸ்கே ரசிகர் ஒருவர் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதை ஜடேஜா லைக் செய்துள்ளது, ரசிகர்கள் செய்துவரும் செயலால் ஜடேஜா வருத்தம் அடைந்துள்ளதை வெளிப்படுத்துவதாக காட்டுகிறது. ட்விட்டர் பக்கத்தில் ரசிகர் பதிவிட்டதாவது:
“ஜடேஜா கடைசியாக நடந்த போட்டியில் ஆட்டநாயகன் விருது பெற்றபிறகு, சிரித்துக் கொண்டே தனது வருத்தத்தை தெரிவித்து இருந்தாலும், உள்ளுக்குள்ளே பல வலிகளுடன் இருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது. யோசித்துப் பாருங்கள்! சொந்த அணியின் மைதானத்தில் இருக்கும் ரசிகர்கள் உங்களுக்கு சப்போர்ட் செய்யாமல் நீங்கள் ஆட்டம் இழந்த போது கரகோஷம் எழுப்பி கொண்டாடினால் எத்தகைய மனநிலை உங்களுக்கு இருக்கும்? அத்துடன் மூன்று முறை ஆட்டநாயகன் விருதை பெற்றிருக்கிறார். அவ்வளவு சிறப்பாக செயல்பட்டவருக்கு எவ்வளவு கஷ்டமாக இருக்கும்.
ஜடேஜா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இளவரசர்!.” என்று பதிவிட்டு இருந்தார் இதற்கு ஜடேஜா லைக் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.