கார் விபத்து; ஜடேஜாவின் மனைவியை கண்மூடித்தனமாக தாக்கிய காவலர்
கார் விபத்து ஏற்படுத்திய பிரச்சனையில் காவலர் ஒருவர் இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவியை கடுமையாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத்தின் ஜாம்நகர் பகுதியில் இந்திய கிரிக்கெட் வீரர் ரவிந்திர ஜடேஜாவின் மனைவி ரிபாவா ஜடேஜா காரில் சென்றுள்ளார். அப்போது அவரது கார் எதிரே வந்த கான்ஸ்டபிள் சஞ்ஜய் அஹிர், இரு சக்கர வாகனத்தில் மோதியுள்ளது.
இதனையடுத்து ஜடேஜாவின் மனைவிக்கும் காவலர் அஹிருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றவே காவலர் அஹிர் ஜடேஜாவின் முடியை பிடித்து இழுத்து கன்னத்தில் அறைந்து அவரை கடுமையாக தாக்கியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதில் ஜடேஜாவின் மனைவி ரிபாவா காயமடைந்துள்ளதாகவும் தெரிகிறது.
இதையடுத்து ஜடேஜாவின் மனைவி ரிவாபா அளித்த புகாரின் அடிப்படையில் அஹிர் மீது நடவரிக்கை எடுக்கப்படும் என ஜாம்நகர் போலீஸ் எஸ்.ஐ., தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அப்பகுதி காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,‘ பெண்களை தாக்கியது மிகப்பெரிய குற்றம். அதன் அடிப்படையில் அந்த கான்ஸ்டபிள் மீது எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்பட்டுள்ளது. அஹிர் மீது துறை விசாரணை நடத்தப்படும். அதன் பின் அவர் தண்டிக்கப்படுவார்.’ என்றார்.
மேலும் ஜடேஜாவை தாக்கிய காவலர் அஹிரை அப்பகுதி போலீஸார் கைது செய்துள்ளதாகவும், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.