கிங் கோலி ருத்ரதாண்டவம்..பின்னிபெடலெடுத்த டு பிளசிஸ், மேக்ஸ்வெல்… காட்டடி அடித்து ஆர்சிபி 212 ரன்கள் குவிப்பு!

லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் விராட் கோலி, டு பிளசிஸ் மற்றும் மேக்ஸ்வெல் ஆகிய மூவரும் அரைசதம் அடிக்க, 20 ஓவர்கள் முடிவில் 212 ரன்கள் குவித்தது ஆர்சிபி அணி.

பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வரும் 15ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணிகள் மோதி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது

முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணிக்கு துவக்க வீரர்களாக டூ பிளசில் மற்றும் விராட் கோலி இருவரும் களம் இறங்கினர். விராட் கோலி, வந்த முதல் ஓவரிலிருந்து அடிக்க வேண்டும் என்ற முனைப்பை காட்டி விளையாடி வந்தார்.

பவர்-பிளே ஓவர்களில் நிறுத்தாமல் பவுண்டரி மற்றும் சிக்சர்களாக விளாசிய விராட் கோலி 35 பந்துகளில் அரைசதம் அடித்தார். ஆறு ஓவர்களில் ஆர்சிபி யின் துவக்க ஜோடி 56 ரன்கள் சேர்த்தது.  விராட் கோலி 44 பந்துகளில் 66 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தார். இதில் நான்கு பவுண்டரிகள் நான்கு சிக்ஸர்கள் அடங்கும்.

முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 96 ரன்கள் சேர்த்தது. மற்றொரு முனையில் பக்கபலமாக ஆடிவந்த கேப்டன் டு பிளசிஸ் அரைசதம் அடித்தார்.

விராட் கோலி ஆட்டம் இழந்து வெளியேறிய பிறகு உள்ளே வந்த கிளன் மேக்ஸ்வெல் வந்த முதல் பந்தில் இருந்தே அடிக்க தொடங்கினார். மளமளவென்று பவுண்டரி சிக்ஸர்களாக அடித்து வந்த இவர் 24 பந்துகளில் அரைசதம் அடிக்க, ஆர்சிபி அணியின் ஸ்கோர் 200 ரன்களை கடந்தது.

29 பந்துகளில் 59 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தார் மேக்ஸ்வெல். இதில் ஆறு சிக்ஸர்கள் மூன்று பவுண்டரிகள் அடங்கும்.

ஓப்பனிங் இறங்கி போட்டியின் கடைசி வரை நின்று ஆட்டமிழக்காமல் இருந்த டூ ப்ளசிஸ் 46 பந்துகளில் 79 ரன்கள் அடித்தார். இதில் ஐந்து பவுன்டரிகள் 5 சிக்சர்கள் அடங்கும். 20 ஓவர்கள் முடிவில் இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்த ஆர்சிபி அணி 212 ரன்கள் குவித்தது.

ஆர்சிபி அணியின் கோட்டையான சின்னசாமி மைதானத்தில் 213 ரன்கள் எனும் இமாலய இலக்கை சேஸ் செய்து லக்னோ அணி வெற்றி பெறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Mohamed:

This website uses cookies.