தோள்பட்டையில் காயம் ஏற்பட்டிருக்கும் ஆர்சிபி வீரர் ரீஸ் டாப்லே, ஐபிஎல் தொடரில் இருந்து விலகுகிறார் என்று உறுதி செய்திருக்கிறார் ஆர்சிபி பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர்.
ஆர்சிபி அணி இந்த வருட ஐபிஎல் சீசனை மிக சிறப்பாக துவங்கி இருக்கிறது. ஏப்ரல் இரண்டாம் தேதி நடைபெற்ற முதல் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை சின்னசாமி மைதானத்தில் எதிர்கொண்டது.
மும்பை அணி வைத்த 172 ரன்கள் இலக்கை 16.2 ஓவர்களிலேயே சேஸ் செய்து மிரட்டியது. விராட் கோலி கடைசிவரை ஆட்டமிழக்காமல் நின்று வெற்றி பெற்று கொடுத்து நம்பிக்கை அளித்தார்.
ஆர்சிபி அணிக்கு முதல் லீக் போட்டி மிகச்சிறப்பாக அமைந்திருந்தாலும், அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக இருந்த ரீஸ் டாப்லே போட்டியின் நடுவே தோள்பட்டையில் அடிபட்டு பாதியில் விலகினார். அவருக்கு மருத்துவ உதவிகள் கொடுக்கப்பட்டு வந்தது.
ஈடன் கார்டன் மைதானத்தில் இரண்டாவது லீக் போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிராக விளையாடி வரும் ஆர்சிபி அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டிருந்தது. கடந்த போட்டியில் தோள்பட்டையில் அடிபட்டிருந்த ரீஸ் டாப்லே பதிலாக டேவிட் வில்லே உள்ளே எடுத்துவரப்பட்டிருக்கிறார்.
இந்நிலையில் போட்டியின் நடுவே பேட்டியளித்த ஆர்சிபி அணியின் தலைமை பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் கூறுகையில்,
“தோள்பட்டையில் காயம் தீவிரமாக இருக்கிறது. இதனால் ரீஸ் டாப்லே விரைவில் நாடு திரும்புகிறார். அவருக்கான மாற்று வீரரை பார்க்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. என்று தெரிவித்தார். இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளிவரவில்லை என்றாலும், தலைமைப் பயிற்சியாளர் இப்படி கூறியிருப்பதால் ரீஸ் டாப்லே ஐபிஎல் தொடரிலிருந்து விலகுகிறார் என்று உறுதியாகியுள்ளது.
மேலும் பேசிய சஞ்சய் பாங்கர், வணிந்து ஹசரங்கா வருகிற ஏப்ரல் 10ஆம் தேதி ஆர்சிபி அணியுடன் இணைகிறார். 14ஆம் தேதி ஆர்சிபி அணியுடன் ஆஸ்திரேலிய பவுலர் ஜோஸ் ஹேசல்வுட் இணைகிறார். இவர்கள் இருவரும் அணியில் இணைவதால் ரீஸ் டாப்லே விலகியது ஆர்சிபி பெரிய பின்னடைவாக இருக்காது என தெரிகிறது.