பொறுத்திருந்து பாருங்க என்ன நடக்குதுன்னு.. சூரியகுமார் அடிக்கிற அடியில் அனைவரும் நடுங்குவர் – மும்பை இந்தியன்ஸ் கோச் ஆருடம்!

மும்பை மைதானத்தில் ரசிகர்கள் கொடுக்கும் கரகோஷத்தினால் சூரியகுமார் யாதவ் மீண்டும் ஃபார்மிற்கு வந்து விடுவார் என்று நம்பிக்கையுடன் பேட்டி அளித்துள்ளார் மார்க் பவுச்சர்.

இந்திய அணியின் மிஸ்டர் 360 டிகிரி என்று அழைக்கப்பட்டு வரும் சூரியகுமார் யாதவ், டி20 தரவரிசையில் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக திகழ்ந்து வருகிறார். அதிரடிக்கு பெயர்போன இவர், டி20 போட்டிகளில் அசாத்தியமாக விளையாடிவருவதை அனைவரும் பார்த்தோம்.

ஆனால் ஒருநாள் போட்டிகளில் இவரது பார்ம் அப்படியே தலைகீழாக இருக்கிறது. இதுவரை 23 போட்டிகளில் விளையாடி வெறும் 433 ரன்கள் மட்டுமே அடித்திருக்கிறார். இவரது சராசரி 24.06 மட்டுமே.

சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் வரலாறு காணாத அளவில் மோசமான சாதனையை செய்திருக்கிறார். விளையாடிய மூன்று போட்டியிலும் முதல் பந்தில் ஆட்டமிழந்து, ஒரு தொடரில் அனைத்து போட்டிகளிலும் “கோல்டன் டக்” ஆன முதல் வீரர் என்கிற மோசமான சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார்.

ஏற்கனவே நட்சத்திர பந்துவீச்சாளர் இல்லாமல் பும்ரா இல்லாமல் மும்பை இந்தியன்ஸ் அணி மிகவும் தடுமாறி வருகிறது. இந்நிலையில் நட்சத்திர பேட்ஸ்மேன் சூரியகுமார் யாதவ், இப்படி மோசமான பார்மில் இருப்பது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இன்னும் பின்னடைவை தந்திருக்கிறது.

வருகிற ஏப்ரல் 2ஆம் தேதி ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியோடு மும்பை இந்தியன்ஸ் அணி  இந்த சீசனின் முதல் ஆட்டத்தை துவங்குகிறது. இதற்காக தீவிர பயிற்சியிலும் ஈடுபட்டு வருகிறது.

இன்று பத்திரிகையாளர்கள் சந்திப்பில் மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோகித் சர்மா மற்றும் பயிற்சியாளர் மார்க் பவுச்சர் இருவரும் கலந்து கொண்டனர். அப்போது சூரியகுமார் யாதவ் பற்றி கேள்விகள் எழுப்பப்பட்டது. சர்வதேச கிரிக்கெட்டில் அவரது மோசமான பார்மை குறிப்பிட்டு பல்வேறு கேள்விகள் எழுந்தன. அதற்கு பதிலளித்த மார்க் பவுச்சர் கூறியதாவது:

“சூரியகுமார் யாதவ் நம்பர் ஒன் டி20 பேட்ஸ்மேன். டி20 போட்டிகளில் அவருக்கு இணை அவர் மட்டுமே. நல்ல ஃபார்மில் தான் இருக்கிறார். பல தலைசிறந்த வீரர்களுக்கும் இப்படி ஒரு மோசமான நிலை இருந்திருக்கிறது. அதிலிருந்து விரைவில் வெளிவருவார்.

ரோகித் சர்மா சொன்னது போல சூரியகுமார் நல்ல மனநிலையில் தான் இருக்கிறார். எங்களுக்கு அவரது பேட்டிங் மீது எந்தவித கவலையும் இல்லை. முழு நம்பிக்கையுடன் இருக்கிறோம். வான்கடே மைதானத்திற்குள் அவர் களமிறங்கும்பொழுது ரசிகர்கள் கரகோஷத்தினால் மீண்டும் புத்துணர்ச்சி பெற்று நல்ல பார்மிற்கு திரும்புவார். பொறுத்திருந்து பாருங்கள். எதிரணி பவுலர்களுக்கு எவ்வளவு அச்சுறுத்தலாக இருக்கப் போகிறார்.” என்று கம்பீரமாக மார்க் பவுச்சர் பேட்டி அளித்தார்.

Mohamed:

This website uses cookies.