சர்வதேச அணிகளின் சவாலுக்கு ஈடுகொடுக்க தயாராக உள்ளோம் – ஜாக்சன் சிங்

சர்வதேச அணிகளின் சவாலுக்கு ஈடுகொடுக்க தயாராக உள்ளோம் என்று இந்திய அணி வீரர் ஜாக்சன் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

17 வயதிற்குட்பட்டோருக்கான உலக கோப்பை கால்பந்து போட்டித் தொடர் நாளை மறுதினம் தொடங்க உள்ளது. இந்த போட்டிகள் இந்தியாவின் ஆறு நகரங்களில் நடைபெறுகிறது. இத்தொடரில் இந்தியா, அமெரிக்கா, நைஜீரியா உட்பட 24 அணிகள் கலந்து கொள்கின்றன.
இந்திய அணியில் மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த நடுகள தற்காப்பு வீரரான ஜாக்சன் சிங் (16 வயது) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தந்தை உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில், இவரது தாயார் காய்கறி விற்று குடும்பத்தை நடத்தி வருகிறார். இத்தகைய ஏழ்மையான பின்னணியில் இருந்து, தனது திறமையால் இந்திய அணிக்கு தேர்வாகியுள ஜாக்சன் சிங் உலக கோப்பை தொடரில் வெற்றி வாய்ப்பு குறித்து நேற்று கூறியதாவது:-
சிறு வயதில் இருந்தே இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்பதே எனது கனவாக இருந்தது. கடவுளின் அருளால் இன்று இந்தியா அணி சீருடையை அணியும் வாய்ப்பு கிடைத்துள்ளது. 2015ல் சண்டிகர் அகாடமியில் பயிற்சி பெற்றபோது தேர்வு பெறாமல் போனது ஏமாற்றமளித்தது. பின்னர் 2016, 2017ல் மணிப்பூர் யு-15, யு-16 அணிகளுக்கு தலைமையேற்று தேசிய சாம்பியன் பட்டம் வென்றோம். கடந்த மார்ச் மாதம் கோவாவில் யு-17 அணிக்கு எதிராக மினர்வா அணி சார்பில் களமிறங்கி 1-0 என வென்றது திருப்பு முனையாக அமைந்தது.
நான் உட்பட 4 மினர்வா வீரர்கள் கோவா பயிற்சி முகாமுக்கு தேர்வு செய்யப்பட்டோம். தற்போது இந்திய அணியில் இடம் பிடித்திருக்கிறேன். உலக கோப்பையில் சிறப்பாக விளையாடி வெற்றி பெற முயற்சிப்போம். உலகத் தரம் வாய்ந்த அணிகளுக்கு நிச்சயம் ஈடுகொடுப்போம். இவ்வாறு ஜாக்சன் சிங் கூறியுள்ளார்.
இவர் இந்திய அணி கேப்டன் அமர் சிங்கின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Silambarasan Kv: Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

This website uses cookies.