வாஷிங்டன் சுந்தருக்கு இந்திய அணியில் மிகப்பெரிய எதிர்காலம் இருக்கிறது என கணித்துள்ளார் வாஷிம் ஜாபர்.
27ஆம் தேதி நடைபெற்ற இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி ராஞ்சி மைதானத்தில் நடைபெற்றது. இரண்டாவது பேட்டிங் செய்தால் நன்றாக இருக்கும் என்று கணித்து பவுலிங் தேர்வு செய்தார் கேப்டன் ஹர்திக் பாண்டியா.
முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் அடித்தது. பவுலிங்கில் வாஷிங்டன் சுந்தர் 4 ஓவர்களில் 22 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
இதனைத் தொடர்ந்து பேட்டிங் செய்த இந்திய அணிக்கு துவக்கம் படுமோசமாக இருந்தது. 15 ரன்கள் மூன்று விக்கெட்டுகளை இழந்து மிகவும் தடுமாறினர். சூரியகுமார் யாதவ் 47 ரன்களும் ஹர்திக் பாண்டியா 21 ரன்களும் அடித்து சிறு நம்பிக்கை கொடுத்தனர்.
அதன் பின்னர் உள்ளே வந்த வாஷிங்டன் சுந்தர் 25 பந்துகளில் அரைசதம் அடித்து டி20 போட்டிகளில் தனது முதல் அரைசதத்தை பதிவு செய்தார். இவரது போராட்டமும் வெற்றிக்கு உதவவில்லை. ஆனாலும் கடைசி ஓவர் வரை போராடி நம்பிக்கை கொடுத்தார்.
இறுதியில் இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
“இந்த போட்டி நியூசிலாந்து vs வாஷிங்டன் சுந்தர் என்கிற வகையில் இருந்தது. ஏனெனில் பேட்டிங், பௌலிங் மற்றும் ஃபீல்டிங் என மூன்று விதத்திலும் வாஷிங்டன் சுந்தர் அபாரமாக செயல்பட்டு, ஒற்றை ஆளாக போராடினார்.” என போட்டி முடிந்த பிறகு அளித்த பேட்டியில் ஹர்திக் பாண்டியா புகழாரம் சூட்டினார்.
இந்திய அணியின் முன்னாள் வீரர் வாஷிம் ஜாபர், “லிமிடெட் ஓவர் போட்டிகளில் வாஷிங்டன் சுந்தருக்கு மிகச்சிறந்த எதிர்காலம் இந்திய அணியில் இருக்கிறது. டெஸ்ட் போட்டியிலும் ஆஸ்திரேலியாவில் அபாரமாக செயல்பட்டு தன்னை நிரூபித்து இருக்கிறார். இவருக்கு உரிய வாய்ப்பு கொடுங்கள்.” என பேசினார்.
மேலும், வாஷிம் ஜாபர் பேசியதாவது: “முதல் டி20 போட்டியில் வாஷிங்டன் சுந்தர் விளையாடிய விதம் மற்றும் அவரது முனைப்பு எத்தகைய சிறந்த ஆல்ரவுண்டர் என்பதை வெளிக்காட்டுகிறது. லிமிடெட் ஓவர் போட்டிகளில் இவர் காட்டும் முனைப்பு கீழ் வரிசையில் பலம் சேர்கிறது. லிமிடெட் ஓவர் போட்டிகளில் நிச்சயம் தனக்கென ஒரு இடத்தை பதிக்கக்கூடியவராக இருக்கிறார். உரிய வாய்ப்பு கொடுங்கள். இவரை போன்ற வீரர்கள் விஷயத்தில் எந்தவித பாலிடிக்ஸ் வேண்டாம்.” எனவும் பேசினார்.