செஞ்சுரி அடித்த பிறகு, வழக்கமாக இருக்கும் ஆக்ரோஷம் இம்முறை ஏன் இல்லையே ஏன்? என்பதற்கு விளக்கம் அளித்திருக்கிறார் விராட் கோலி.
அகமதாபாத்தில் நடைபெற்ற நான்காவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இதனால் இந்தாண்டு பார்டர் கவாஸ்கர் டிராபியை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது.
உஸ்மான் கவஜா மற்றும் கேமரூன் கிரீன் இருவரும் அபாரமாக சதம் விளாச ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்ஸில் 480 ரன்கள் அடித்தது. அதை பின்தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 571 ரன்கள் அடித்து 91 ரன்கள் முன்னிலை அடைந்து இன்னும் வலுவான நிலையை பெற்றது.
இதற்கு முக்கியமான காரணமாக அமைந்தது துவக்க வீரர் சுப்மன் கில் மற்றும் முன்னாள் கேப்டன் விராத் கோலி இருவரும் அடித்த சதம் ஆகும். இரட்டை சதத்தை நெருங்கிக் கொண்டிருந்த விராட் கோலி, துரதிஷ்டவசமாக 186 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். இருப்பினும் டெஸ்ட் கிரிக்கெட்டில் சுமார் 1200க்கும் மேற்பட்ட நாட்களுக்குப் பிறகு சதம் அடித்திருப்பதால் ரசிகர்கள் வெகுவாக கொண்டாடி தீர்த்தனர்.
ஆனால் சதத்தை அடித்த பிறகு விராட் கோலியின் முகத்தில் சாந்தம் மட்டுமே நிலவியது. வழக்கமாக வெளிப்படுத்தும் ஆக்ரோஷமான கொண்டாட்டம் எதுவும் தெரியவில்லை.
ஆசிய கோப்பையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக முதல் டி20 சதம் விளாசியபோதும், வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் நீண்ட இடைவெளிக்குப்பின் சதம் விளாசியபோதும், தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் 1200+ நாட்களுக்கு பின் சதம் அடித்தபோதும் விராட் கோலி முகத்தில் சாந்தம் மட்டுமே நிலவியது. இதற்கு என்ன காரணம் என்று பல்வேறு சந்தேகங்களும் கேள்விகளும் எழுந்தன.
4வது டெஸ்ட் போட்டியில் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்ட பேசிய விராட் கோலி, இவை அனைத்திற்கும் பதில் கூறியிருக்கிறார். அவர் கூறியதாவது:
“உண்மையில், நான் எவ்வளவு ரன்கள் அடிக்கவேண்டும் என்பதில் கவனம் செலுத்தாமல் எனது ஆட்டத்தில் கவனம் செலுத்துகிறேன். இந்த தொடரில் நாக்பூர் போட்டியில் இருந்து நான் நல்ல டச்சில் தான் இருந்தேன். கடந்த காலங்களில் கொடுத்த அதே உழைப்பை இப்போதும் கொடுத்து வருகிறேன். ஆனாலும் கடந்த காலங்களில் நான் விளையாடிய தரத்திற்கு சமீப காலமாக விளையாடவில்லை என்பது வருத்தம் அளித்தது.”
“மைதானத்தில் இறங்கி ரன்கள் அடித்து, நான் யார் என்பதை நிரூபிக்க வேண்டிய இடத்தில் நான் இல்லை. ஆனாலும் நான் ஏன் இன்னும் அணியில் இருக்கிறேன். களத்தில் ஏன் இறக்கப்படுகிறேன் என்பதை உணர்த்தவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். அதற்காக ரன்கள் அடிக்க வேண்டிய அவசியம் இருந்தது.
நான் இப்படி ஆடவேண்டும், அப்படி ஆடவேண்டும் என பலரும் என்மீது வைக்கும் விமர்சனத்தில் இருந்து இனி விலகி இருப்பேன் என்பது நிம்மதியாக இருக்கிறது. அதன் வெளிப்பாடு தான் என்னுடைய இந்த செலிப்ரேஷன்.” என்று கூறினார்.
மேலும் ஷ்ரேயாஸ் ஐயர் இல்லாமல், இரட்டை சதத்தை தவறவிட்டது பற்றி பேசிய அவர், “எனக்கு தகவல்கள் வந்தது. ஒரு பேட்ஸ்மேன் குறைவாக விளையாடுகிறோம். அடிக்கமுடியவில்லையே என்று வருத்தமாக இல்லை. அவர் இல்லாத இடத்தில் வேகமாக நான் குவிக்க வேண்டும் என்று நினைத்தேன். அவ்வளவுதான். அதேநேரம் முன்னிலையில் இருந்ததால், தைரியமாக அடிக்க முயற்சித்தேன்.” என்றார்.