உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் எதிர்பாராத நிகழ்வாக நடப்புச் சாம்பியனான ஜெர்மனி நாக் அவுட் சுற்றுக்கு தகுதிபெறாமல் போட்டியிலிருந்து வெளியேறியது. ஜெர்மனி, உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் முதல் சுற்றோடு வெளியேறுவது கடந்த 80 ஆண்டுகளில் இது முதல் முறையாகும்.
நாக் அவுட் சுற்று வாய்ப்பை உறுதி செய்ய தென் கொரியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 2 கோல்கள் வித்தியாசத்தில் வென்றிருக்க வேண்டிய ஜெர்மனி, மாறாக அந்த அணியிடம் 2 கோல்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. அத்துடன், எஃப்’ பிரிவில் 3 புள்ளிகளுடன் கடைசி இடத்தைப் பிடித்தது.
கஸான் அரினா மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், முழு நேரம் வரையில் இரு அணிகளுமே கோல் அடிக்கவில்லை. பின்னர் வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தில் தென் கொரியா 2 கோல்கள் அடித்து வரலாற்று வெற்றி கண்டது.
ஜெர்மனி அணி எதனால் தோல்வி கண்டது? இந்தத் தோல்வியைச் சுற்றியுள்ள ஐந்து முக்கிய அம்சங்கள்:
பலமான பின்னணி = அதீத நம்பிக்கை?
* 1938-க்குப் பிறகு இப்போதுதான் முதல் சுற்றில் வெளியேறியிருக்கிறது ஜெர்மனி. அதாவது 80 வருடங்களில் முதல்முறையாக முதல் சுற்றிலேயே வெளியேறியிருக்கிறது. ஃபிஃபா தரவரிசைப் பட்டியலில் ஜெர்மனி முதலிடத்தில் உள்ளது.
உலக சாம்பியனாக நான்கு முறை (1954, 1974, 1990, 2014) கொடிகட்டிப் பறந்த அணிக்கு இந்த நிலைமை என்பதை யாரால் நம்பமுடியும்? 18 முறை உலகக் கோப்பைப் போட்டிகளில் விளையாடிய ஜெர்மனி அணி, 13 முறை அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது. 8 முறை இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்று நான்கு முறை சாம்பியன் ஆகியுள்ளது.
கடந்த 5 உலகக் கோப்பைப் போட்டிகளில் இது நான்காவது முறை. 2002-ல் பிரான்சும் 2010-ல் இத்தாலியும் 2014-ல் ஸ்பெயினும் 2018-ல் ஜெர்மனியும் நடப்பு சாம்பியன்களாக இருந்து முதல் சுற்றிலேயே வெளியேறிய அணிகள்.
உலகக் கோப்பை உள்ளிட்ட சமீபத்திய ஆறு பெரிய போட்டிகளில் ஜெர்மனி அணி அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது. இதனால் ரஷியப் போட்டியிலும் குறைந்தபட்சம் அரையிறுதிக்குத் தகுதி பெறும் என அணி நிர்வாகமும் ரசிகர்களும் நம்பினார்கள்.
உலகக் கோப்பை 2006: அரையிறுதி
யூரோ கோப்பை 2008: இரண்டாம் இடம்
உலகக் கோப்பை 2010: அரையிறுதி
யூரோ கோப்பை 2012: அரையிறுதி
உலகக் கோப்பை 2014: சாம்பியன்
யூரோ கோப்பை 2016: அரையிறுதி