அதுக்குள்ள 19 வருசம் ஆச்சா? ஆஸ்திரேலியாவை மிரளவைத்த டிராவிட், லக்ஷ்மன்! நினைவிருக்கிறதா?
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் நினைவிலிருந்து அகலாத ஒரு டெஸ்ட் போட்டி என்றால் அது 2001 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்ற டெஸ்ட் போட்டி என்றால் சற்றும் மிகையாகாது.
இந்த போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் தவிர்க்க முடியாமல் ஃபாலோ ஆன் ஆகி அதன் பின்னர் 176 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ராகுல் டிராவிட் மற்றும் ஜிபிஎஸ் லட்சுமணன் இருவரும் நங்கூரம் போல நிலைத்து நின்று எதிரணியின் பந்துவீச்சை அனாயசமாக விளையாடி இந்திய அணிக்கு வெற்றி தேடித் தந்தனர். ஆதலால் இந்த போட்டி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பெற்றிருக்கிறது.
போட்டி ஒரு பார்வை:
இந்த போட்டியில் முதல் இனிங்ஸில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 445 ரன்கள் குவித்தது. இதனையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி 171 ரன்கள் மட்டுமே எடுத்து ஃபாலோ ஆன் முறைக்கு தள்ளப்பட்டது. இதனால் இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வி அடைய அதிக வாய்ப்புகள் உண்டு என்று எதிர்பார்த்தனர்.
ஆனால், ரசிகர்களின் எண்ணத்தை புரட்டிபோடும் விதமாக ராகுல் டிராவிட் மற்றும் விவிஎஸ் லக்ஷ்மன் ஆகிய இருவரும் விஸ்வரூபம் எடுத்து ரன்களை குவித்தனர். ராகுல் டிராவிட் 180 ரன்களும் விவிஎஸ் லட்சுமணன் 281 ரன்கள் எடுத்ததால் இந்திய அணியின் ஸ்கோர் 657 ஆக உயர்ந்தது. பின்னர் இந்திய அணி டிக்ளேர் செய்தது.
இதனை அடுத்து இரண்டாவது இன்னிங்சில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 212 ரன்கள் மட்டுமே எடுத்ததால் இந்திய அணி 176 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஃபாலோ ஆன் முறையை ஏற்ற ஒரு அணி அதே போட்டியில் வெற்றியை காண்பது என்பது மிக அரிதாக நடக்கும் ஒரு நிகழ்வு.
இதனாலேயே இந்த போட்டியை 19 வருடங்கள் கழித்தும் இப்போதும் நான் பேசிக் கொண்டிருக்கிறோம். ஏன் இந்திய டெஸ்ட் வரலாற்றில் கொண்டாடக்கூடிய ஒரு போட்டியகவும் இருக்கிறது.