14வது ஐபிஎல் சீசன் தற்போது சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 9 முதல் நடைபெற்று வரும் இந்த தொடரில் இதுவரை 7 போட்டிகள் முடிவடைந்துள்ளது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இரண்டு வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது.
இந்நிலையில், இந்த ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி பலம் வாய்ந்த அணியாக கருதப்பட்டது. ஆனால் டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் இருந்து தற்போது இரண்டு வீரர்கள் வெளியேறி இருக்கிறார்கள். டெல்லி கேப்டன் ஸ்ரேயஸ் ஐயருக்கு இங்கிலாந்து சுற்றுப்பயணத் தொடரில் காயம் ஏற்பட்டதால் இந்த சீசன் முழுவதும் விளையாட முடியாமல் போனது.
இது டெல்லி அணிக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் டெல்லி அணியில் புதிய கேப்டன் நியமிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து தொடரில் அதிரடி காட்டிய இந்திய இளம் வீரர் ரிஷப் பண்ட்டை டெல்லியின் புதிய கேப்டனாக அறிவித்தனர்.
டெல்லி அணியின் ஆல்ரவுண்டர் அக்சர் பட்டேலுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதால் தற்போது அவர் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார். இதனால் முதல் இரண்டு போட்டிகளில் அக்சர் பட்டேல் விளையாட முடியாமல் பேனது.
இருந்தாலும் சிஎஸ்கேவுக்கு எதிரான முதல் போட்டியில் டெல்லி அணி பேட்ஸ்மன்கள் மற்றும் பவுலர்கள் என அனைவரும் சிறப்பாக விளையாடி 7 விக்கெட்டில் வெற்றி பெற்றனர். இதில் தவான் 85 மற்றும் பிரித்வி ஷா 72 ரன்கள் குவித்தனர்.
இந்நிலையில், ஸ்ரேயஸ் ஐயர் மற்றும் அக்சர் பட்டேலுக்கு பதிலாக இரண்டு புதிய வீரர்களை டெல்லி கேப்பிடல்ஸ் அணி தேர்வு செய்திருக்கிறது. ஸ்ரேயஸ் ஐயருக்கு பதிலாக அனிருதா ஜோஷி என்ற உள்ளூர் வீரர் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.
இவர் உள்ளூர் போட்டிகளில் கர்னாடக அணிக்காக மிடில் ஆர்டரில் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார். 22 டி20 போட்டிகளில் விளையாடி 420 ரன்கள் குவித்திருக்கிறார்.
இதையடுத்து அக்சர் பட்டேல் மீண்டும் வரும் வரைக்கு அவருக்கு பதிலாக ஷம்ஸ் முலானியை டெல்லி கேப்பிடல்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது. இதுவரை 25 டி20 போட்டிகளில் விளையாடி உள்ள முலானி 24 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.