கொரோனா வைரஸ் பாதிப்பு; தன்னால் முடிந்த உதவியை செய்துள்ளார் ரஹானே
கொரோனா எதிர்ப்பு நடவடிக்கை நிவாரண நிதியாக மகாராஷ்டிராவின் முதலமைச்சர் கணக்கிற்கு இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டன் ரஹானே ரூ.10 லட்சம் வழங்கினார்.
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மனிதர்களை பாதித்துள்ள நிலையில், பொருளாதாரத்தையும் கடுமையாக பாதித்துள்ளது. இந்தியாவிலும் பங்குச் சந்தைகள், உள்நாட்டு உற்பத்தி, பொருட்கள் விற்பனை என அனைத்தும் சரிவை சந்தித்துள்ளன. இதற்கிடையே பொருளாதாரம் பாதித்தாலும் பரவாயில்லை மக்கள் நலனே முக்கியம் என 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை பிரதமர் மோடி பிறப்பித்தார்.
3 மாதங்களுக்கு கடனாளர்களின் இ.எம்.ஐ கட்டணங்களை தவிர்க்குமாறு வங்கிகளுக்கு ஆர்.பி.ஐ அனுமதி அளித்துள்ளது. இதற்கிடையே கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு எதிராக மத்திய அரசு, மாநில அரசுகள் சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்து மருத்துவ மற்றும் சுகாதாரப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. அதேசமயம் மத்திய அரசும், மாநில அரசுகளும் நாட்டில் உள்ள அனைவரிடமும் நிவாரணம் அளிக்க கோரியுள்ளது. இதையடுத்து சினிமா பிரபலங்கள் மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் என பல்வேறு துறையினரும் அரசுக்கு நிதி வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் மகாராஷ்டிர முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு கிரிக்கெட் வீரர் ரஹானே ரூ.10 லட்சம் வழங்கியுள்ளார். இதற்கிடையே சச்சின் டெண்டுல்கர் ரூ.50 லட்சம் மற்றும் சுரேஷ் ரெய்னா ரூ.52 லட்சம் தொகையை கொரோனா எதிர்ப்பு நிவாரண நிதிக்காக கொடுத்திருந்தனர். இந்தியாவில் மகாராஷ்டிரா கொரோனா வைரஸ் அதிகம் பாதித்த மாநிலங்களுள் ஒன்றாக திகழ்கிறது.