அடுத்த டெஸ்ட் கேப்டனாக இருக்கப்போவது யார்? ரோகித், ராகுல் இல்லையா?; பிசிசிஐ தகவல்

அடுத்த டெஸ்ட் கேப்டனாக இருக்க போவது யார் என்பது குறித்து தகவல் வெளியிட்டுள்ளது பிசிசிஐ.

டி20 உலகக் கோப்பைக்கு பிறகு, டி20 போட்டிகளின் கேப்டன் பொறுப்பில் இருந்து விராத் கோலி ராஜினாமா செய்தார். லிமிடெட் ஓவர் போட்டிகளில் இரண்டு கேப்டன்கள் தேவை இல்லை என்ற காரணத்திற்காக, ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பொறுப்பை ரோஹித் சர்மாவிடம் மாற்றிக் கொடுத்தது பிசிசிஐ.

இதனால் பத்திரிக்கைகளில் பிசிசிஐ மற்றும் விராட் கோலிக்கு இடையே பனிப்போர் நிலவுகிறது என செய்திகள் வெளிவந்தன. டெஸ்ட் தொடருக்கு பிறகு, திடீரென டெஸ்ட் போட்டிகளுக்கான கேப்டன் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்வதாக விராட் கோலி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு செய்திருந்தார். இந்த சம்பவம் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது.

விராட் கோலி சிறப்பாக செயல்பட்டு வந்ததால், மாற்று கேப்டன் குறித்து பிசிசிஐ தரப்பு அதுவரை முடிவு செய்யாமல் இருந்தது. திடீரென விராட்கோலி விலகியதால், அடுத்த கேப்டன் யார் என்ற கேள்விகள் தொடர்ந்து எழுந்து வருகின்றன. இதற்கு பதில் அளிக்கும் விதமாக சமீபத்திய பேட்டியில் பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார். அவர் கூறுகையில்,

“விராட் கோலி குறைந்தபட்சம் 2 அல்லது 3 ஆண்டுகளுக்கு இன்னும் கேப்டனாக இருப்பார் என எதிர்பார்த்தோம். திடீரென அவர் இத்தகைய முடிவை அறிவித்தால் அடுத்த கேப்டன் யார் என்று இன்னும் முடிவு செய்யவில்லை. இதற்கான ஆலோசனைகளும் இன்னும் நடைபெறவில்லை. எனினும் தென்னாபிரிக்காவுடனான ஒருநாள் தொடருக்கு பிறகு இன்னும் நாட்கள் இருக்கின்றன. விரைவில் முடிவுகள் எடுக்கப்படும்.

டெஸ்ட் கேப்டன் குறித்த முடிவை இந்திய அணியின் தேர்வுக்குழு அதிகாரிகள் எடுப்பர். ரோகித் சர்மா துணை கேப்டனாக இருக்கிறார். நேரடியாக அவர் கேப்டனாக எடுக்கப்படலாம். இல்லையெனில் ஏற்கனவே அவருக்கு லிமிடெட் ஓவர் போட்டிகளுக்கான கேப்டன் பொறுப்பு இருப்பதால் அதிக வேலைப்பளு அவருக்கு விழுந்துவிடும் என்ற காரணத்திற்காக, வேறு ஒரு வீரரை டெஸ்ட் கேப்டனாக அறிவிக்கலாம். இந்த வரிசையில் கேஎல் ராகுல் முன்னணியில் இருக்கலாம் என நினைக்கிறேன்.” என்று பிசிசிஐ அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

Prabhu Soundar:

This website uses cookies.