“டி20 உலக கோப்பை வரை இருங்க தோனி” – வற்புறுத்தும் பிசிசிஐ

டி20 உலக கோப்பை வரை ரிஷப் பண்ட்டை தயார்படுத்துவதற்காக தோனி அணியில் நீடிக்க வேண்டும் என பிசிசிஐ-இடம் இந்திய அணி நிர்வாகம் வற்புறுத்தி வருகிறது.

உலக கோப்பை தொடரின் அரையிறுதியில் இந்திய அணி தோல்வியை தழுவி வெளியேறிய பிறகு அணியில் பல மாற்றங்களைக் கொண்டுவர பிசிசிஐ செய்ய முடிவு செய்தது. முதலாவதாக, நடுவரிசையில் கேதர் ஜாதவ், தினேஷ் கார்த்திக் இருவரையும் நீக்கிவிட்டு இளம் வீரர்களை மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் தேர்வு செய்துள்ளது.

அடுத்ததாக, கேப்டன் பொறுப்பில் மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், விராட் கோலி எவ்வித மாற்றமும் இல்லாமல் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரிலும் டெஸ்ட், டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து கேப்டனாக இருக்கிறார்.

தோனி எப்போது ஓய்வு பெறுவார்? இந்திய அணியின் அடுத்தடுத்த தொடர்களில் அவர் இருப்பாரா? என்ற கேள்விகள் தொடர்ந்து எழுப்பப்பட்டு வந்தன. இதற்கு மவுனம் காத்து வந்த தோனி, வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு செல்லும் வீரர்களை அறிவிக்கும் முன், இந்திய அணியில் இரண்டு மாதங்கள் நான் இருக்கப் போவதில்லை என்றும், இராணுவ பயிற்சியில் ஈடுபட இருப்பதாகவும் தோனி தெரிவித்தார். இதனால் இரண்டு மாதத்திற்கு தன்னை அணியில் எடுக்க வேண்டாம் என்பதையும் திட்டவட்டமாக தெரிவித்ததால் இத்தொடருக்கு அவரை தேர்வு செய்யவில்லை.

தோனியை அடுத்து இந்திய அணியில் அனுபவம் மிக்க விக்கெட் கீப்பர் எவரும் இல்லை. மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கு ரிஷப் பண்ட் முதன்மை கீப்பராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

டெஸ்ட் போட்டியில் விருதிமான் சஹா இடம் பெற்றாலும், ரிஷப் பண்ட் முதன்மை கீப்பராக இருக்கிறார். இந்நிலையில் பண்ட்டை வருகின்ற டி20 உலகக் கோப்பை தொடர் வரை தயார்படுத்துவதற்காக தோனி இந்திய அணியில் இடம் பெற வேண்டும் என இந்திய அணி நிர்வாகம் பிசிசிஐ இடம் தொடர்ந்து வற்புறுத்தி வருகிறது.

தோனி இல்லாத போது ரிஷப் பண்ட் பல தவறுகளை செய்ததை நாம் அனைவரும் கண்டிருப்போம். டி20 உலக கோப்பை தொடரில் இதுபோன்ற தவறுகளை செய்தால் லீக் போட்டியிலேயே இந்திய அணி வெளியேற நேரிடும். ஆதலால் அதுவரை தோனி அணியில் இடம்பெற வேண்டும் அவரை முடிந்தவரை புறக்கணிக்க வேண்டாம் என இந்திய அணி நிர்வாகம் பிசிசிஐ-இடம் வற்புறுத்தி வருகிறது.

Prabhu Soundar:

This website uses cookies.