பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தின் இடையே புவனேஷ்வர் குமார் காயம் காரணமாக விலகினார்.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய (ஞாயிற்றுக்கிழமை) ஆட்டத்தில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. முதலில் பேட் செய்த இந்திய அணி 336 ரன்கள் குவித்தது. 337 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது.
இந்திய அணிக்கு வழக்கம் போல் புவனேஷ்வர் குமார் மற்றும் பூம்ரா தொடக்க ஓவர்களை வீச தொடங்கினார். புவனேஷ்வர் குமார் தனது 3-வது ஓவரை வீசி வந்த நிலையில், அவருக்கு தசை பிடிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அவர் உடனடியாக வீரர்கள் அறைக்கு திரும்பினார்.
இதனால், அந்த ஓவரின் மீதமிருந்த இரண்டு பந்துகளை வீச கோலி, விஜய் சங்கரை அழைத்தார். விஜய் சங்கரோ யாரும் எதிர்பாராத வகையில் முதல் பந்திலேயே இமாம் விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார்.
ஆனால், புவனேஷ்வர் குமாரின் காயம் குறித்து இந்திய அணியின் நிர்வாகம் பிறகு தெரிவிக்கையில், புவனேஷ்வர் குமார் காயம் காரணமாக இந்த ஆட்டத்தில் மேற்கொண்டு பங்கேற்க மாட்டார் என்றது. இந்த செய்தி இந்திய அணிக்கு மிகப் பெரிய பின்னடைவாக உள்ளது.
இந்த ஆட்டத்தில் புவனேஷ்வர் குமார் தொடக்கத்தில் சிறப்பாக பந்துவீசி வந்தார். எனவே, மீதமுள்ள இவரது 7 ஓவர்களை ஹார்திக் பாண்டியா மற்றும் விஜய் சங்கர் வீச வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நடு ஓவர்களில் சமாளித்தாலும், ஃபினிஷிங்கில் புவனேஷ்வர் இல்லாதது நிச்சயம் இந்திய அணிக்கு பின்னடைவாக அமையும்.
புவனேஷ்வர் குமார் காயம் குறித்த முழுமையாக தகவல்கள் ஏதும் தெரியவில்லை. தற்போதைய சூழலில், அவர் இந்த ஆட்டத்தில் இருந்து விலகியுள்ளார். காயத்தின் வீரியம் மோசமாக இருந்தால், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் புவனேஷ்வர் குமாருக்கு பதிலாக முகமது ஷமி களமிறங்கலாம்.
இதன் காரணமாக அவரது காயம் ஆறும் வரை அடுத்த மூன்று போட்டிகளுக்கு புவனேஸ்வர் குமார் ஆட மாட்டார் என்று தெரிகிறது.
இந்திய அணியில் ஏற்கெனவே, ஷிகர் தவான் காயம் காரணமாக அவதிப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.