இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் ஆவேஷ் கான் பத்திரிகையாளர்களின் சந்திப்பின்போது தனது கிரிக்கெட் கரியருக்கு உதவியாக இருந்தவர் குறித்து பேசியுள்ளார்.
2022 ஐபிஎல் தொடருக்கான ஏலம் பிப்ரவரி 12 மற்றும் 13 ஆம் தேதி நடைபெறும் என்று பிசிசிஐ அறிவித்து விட்டதால் ஐபிஎல் தொடர் சம்பந்தமான செய்திகள் அதிகமாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் 2022 ஐபிஎல் தொடரில் அதிக தொகைக்கு ஏலத்திற்கு போகும் வாய்ப்புள்ள வீரர்களில் ஒருவராக கருதப்படும் டெல்லி கேப்பிடல் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அவேஷ் கான், தான் டெல்லி அணியில் விளையாடிய போது நடந்த சுவாரசியமான சம்பவங்கள் குறித்து பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது பேசியுள்ளார்.
கடந்த 2021 ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர்களாக இருந்த காகிசோ ரபாடா , அன்றிச் நோட்சே மற்றும் இஷாந்த் ஷர்மா ஆகிய மூவரும் இடம் பெறாததால் அவர்களுக்கு பதில் டெல்லி கேப்பிடல் அணி, இளம் வீரரான ஆவேஷ் கானுக்கு வாய்பளித்தது, இதனை ஆவேஷ் கான் மிகச் சிறப்பாக பயன்படுத்தி 2021 ஐபிஎல் தொடரில் அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் வரிசையில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறினார்.
இந்த நிலையில் டெல்லி அணியில் விளையாடியது குறித்து அவேஷ் கான் பேசுகையில்,டெல்லி அணியில் 4 வருடங்களுக்கு பிறகு முதல் முறை விளையாட வாய்ப்பு கிடைத்தபோது, ரிக்கி பாண்டிங் என் தோளில் தட்டி இதுதான் உனக்கு கிடைத்த வாய்ப்பு அதை சரியாக பயன்படுத்திகொள் ஏனென்றால் இந்த வாய்புக்காக தான் 4 வருடங்கள் அணியில் இருந்திருக்கிறாய் என்று ரிக்கி பாண்டிங் எனக்கு ஆதரவாக பேசினார், நான் பயிற்சியில் ஈடுபடும் பொழுதெல்லாம் எப்பொழுதும் தயாராகவே இருந்து கொள் என்று என்னிடம் கூறுவார். ரிக்கி பாண்டிங் என்மீது வைத்த நம்பிக்கையின் காரணமாக 2021 ஐபிஎல் தொடரில் என்னால் சிறப்பாக செயல்பட முடிந்தது, நான் சிறப்பாக செயல்பட்டதற்கு முக்கிய காரணம் ரிக்கி பாண்டிங் ஆதரவும் மற்றும் டெல்லி அணியின் கேப்டனாக திகழ்ந்த ரிஷப் பண்ட் ஆதரவும் தான் என்று ஆவேஷ் கான் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.