மேக்ஸ்வெல் சரியாக விளையாடாததற்கு ரிஷப் பண்ட் தான் காரணம்; ரிக்கி பாண்டிங்
டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் முக்கிய வீரராக பார்க்கப்பட்ட கிளன் மேக்ஸ்வெல் சரியாக விளையாடாததற்கு ரிஷப் பண்டும் ஒரு காரணம் என்று அந்த அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
ஐ.பி.எல் 2018ம் ஆண்டு தொடருக்கான டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் மிக முக்கிய வீரராக பார்க்கப்பட்டவர் கிளன் மேக்ஸ்வெல். ஆஸ்திரேலியாவை சேர்ந்த அனுபவ ஆல் ரவுண்டரான இவர் மீது அதிக எதிர்பார்ப்புகள் இருந்தது, ஆனால் கிளன் மேக்ஸ்வெல் ஒரு போட்டியில் ஒரு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பெரிதாக விளையாடவில்லை.
இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள டெல்லி அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் கிளன் மேக்ஸ்வெல்லின் சொதப்பல் ஆட்டத்திற்கு ரிஷப் பண்டும் ஒரு வகையில் காரணம் என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து ரிக்கி பாண்டிங் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாது;
நடப்பு ஐபிஎல் சீசன் ரிஷப் பந்த்துக்கு மிக அருமையான ஒரு தனித்துவ தொடராக அமைந்தது. ஆனால் டாப் ஆர்டரிமிருந்து மேலும் கூடுதல் பங்களிப்பை எதிர்பார்த்தோம், ஆனால் டாப் ஆர்டர் சீரான முறையில் ஆடவில்லை.
கிளென் மேக்ஸ்வெல் சோடைபோனதற்கு ஒரு விதத்தில் ரிஷப் பந்த் காரணம். ரிஷப் பந்த் 4ம் நிலையில் இறங்கி பிரமாதப்படுத்தினார். ஏலத்தில் மேக்ஸ்வெல் பெயரைக் குறிக்கும் போது 4ம் நிலை வீரர் என்றே குறித்தேன். ஆனால் ஏரோன் பிஞ்ச் திருமணத்துக்காக அவர் சென்ற போது முதல் போட்டியில் ஆட முடியாமல் போனது, இதனால் ரிஷப் பந்த் 4ம் நிலையில் இறங்கி அசத்திவிட்டார், இவரையும் மாற்ற முடியவில்லை, 5ம் நிலை கிளென் மேக்ஸ்வெலுக்கு அவ்வளவாக பழக்கமில்லாத டவுன் ஆர்டர், எப்போதாவதுதான் இறங்குவார்.
அவரை ஏன் தொடர்ந்து வைத்திருந்தோம் என்றால் ஒவ்வொரு ஆட்டமும் இறுதிப் போட்டியான பின்பு அணியை வெற்றிபெறச் செய்யும் வீரராகவே கிளென் மேக்ஸ்வெலைப் பார்த்தோம். மேட்ச் வின்னராக அவருக்குத்தான் வாய்ப்பு என்று உண்மையிலேயே நினைத்தோம்.
திரும்பிப்பார்த்தால், நாங்கள் நிறைய போட்டிகளில் வென்றிருக்க வேண்டும். முக்கியத் தருணங்களில் சிறப்பாக நாங்கள் ஆடவில்லை, ஆனால் கடைசியில் நன்றாக முடித்தோம் என்பதில் பெருமை உள்ளது” என்றார்.