உலகக் கோப்பை தொடங்குவதற்கு முன்பே தெரிவித்தது போல் இங்கிலாந்து தான் இறுதி ஆட்டத்தில் வெற்றி பெறும் என்று ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நாளை நடைபெறும் இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து, நியூஸிலாந்து அணிகள் மோதுகின்றன. இரண்டு அணிகளுமே இதுவரை ஒருமுறை கூட உலகக் கோப்பையை வெல்லாததால், நாளைய இறுதி ஆட்டத்தில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், உலகக் கோப்பையை வெல்லும் அணி குறித்து ரிக்கி பாண்டிங் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் பேசியதாவது,
“இங்கிலாந்து வெற்றி பெறும் என்று நினைக்கிறேன். இங்கிலாந்தை வீழ்த்துவது மிகவும் கடினம் என்று தொடர் தொடங்குவதற்கு முன்பே நான் தெரிவித்தேன். இங்கிலாந்து தான் விருப்பமான அணியாக இருந்தது, அதில் தற்போது எந்த மாற்றமும் இல்லை.
நியூஸிலாந்து அணி இறுதி ஆட்டத்துக்கு முன்னேற சிறப்பாக செயல்பட்டுள்ளது. தொடர்ந்து இரண்டு முறை இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது மிகச் சிறந்த சாதனை. கடந்த இறுதி ஆட்டத்தில் விளையாடிய அனுபவம் நியூஸிலாந்துக்கு உள்ளது. அதேசமயம், இறுதி ஆட்டத்தில் விளையாடிய அனுபவம் எந்தவொரு இங்கிலாந்து வீரர்களுக்கும் கிடையாது.
எனினும், இங்கிலாந்து அணியிடம் கொஞ்சம் கூடுதல் தரம் உள்ளது. அது நியூஸிலாந்து வெற்றி பெறுவதை தடுக்கும்” என்றார்.
உலக கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து–நியூசிலாந்து அணிகள் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் விளையாட உள்ளன.
முதல்முறையாக உலக கோப்பையை கையில் ஏந்த இவ்விரு அணிகளும் துடித்துக் கொண்டிருக்கும் நிலையில், உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில், இவ்விரு அணிகளும் 9 முறை சந்தித்து உள்ளன. அதில் 4 போட்டிகளில் இங்கிலாந்தும், 5 போட்டிகளில் நியூசிலாந்தும் வெற்றி கண்டுள்ளன.
கடந்த 1975 ஆம் ஆண்டு நடைபெற்ற முதலாவது உலக கோப்பையில் லீக் சுற்றில் இங்கிலாந்து அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை எளிதில் வீழ்த்தியது.
1979 ஆம் ஆண்டு போட்டியின் அரைஇறுதியில் இங்கிலாந்து அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை சாய்த்தது. 1983 ஆம் ஆண்டு உலக கோப்பையில் லீக் போட்டியில் இரு அணிகளும் இரண்டு முறை மோதின.
முதலாவது லீக் ஆட்டத்தில் 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி அடுத்த ஆட்டத்தில் 2 விக்கெட் வித்தியாசத்தில் தோற்று போனது.
1992 ஆம் ஆண்டு போட்டியின் லீக் சுற்றில் இங்கிலாந்து எடுத்த 200 ரன்களை, நியூசிலாந்து அணி எளிதில் விரட்டிப்பிடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
1996 ஆம் ஆண்டின் லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி, இங்கிலாந்து அணியை தோற்கடித்தது.