டெல்லி அணி வரிசையாக 5 லீக் போட்டிகளில் தோல்வியை தழுவியதற்கு ரிக்கி பாண்டிங் முழு பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். வேறு ஒருத்தரை காரணம் காட்டி தப்பிக்க முடியாது என்று கடுமையாக விமர்சித்துள்ளார் வீரேந்திர சேவாக்.
நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகளில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி விளையாடி 5 போட்டிகளில் அனைத்திலும் தோல்வியடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது.
அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் சாலை விபத்தில் படுகாயம் அடைந்ததால் அவரால் இந்த ஐபிஎல் சீசன் விளையாட முடியவில்லை. ஆகையால் டேவிட் வார்னர் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இவர் தலைமையில் விளையாடிய 5 போட்டிகளில் 3 போட்டிகள் வெளி மைதானத்திலும் இரண்டு போட்டிகள் டெல்லி மைதானத்திலும் நடைபெற்றது.
சொந்த மைதானமான டெல்லி மைதானத்தில் விளையாடிய 2 போட்டியிலும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தோல்வியை தழுவியிருப்பது கூடுதல் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
இந்த தொடர்ச்சியான தோல்விகளுக்கு ரிக்கி பாண்டிங் முழு பொறுப்பையும் ஏற்க வேண்டும். ஏனெனில் இளம் வீரர்களை வைத்துக்கொண்டு பிளே-ஆப் மற்றும் பைனலுக்கு சென்றுள்ளோம் என்று மார்தட்டிக்கொண்ட அவர் தான் இந்த தோல்விகளுக்கும் பொறுப்பேற்பது சரியாக இருக்கும் என்று கடுமையாக விமர்சித்து இருக்கிறார் முன்னாள் இந்திய வீரர் வீரேந்திர சேவாக். அவர் கூறியதாவது:
“ரிக்கி பாண்டிங் அணியின் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்ற பிறகு டெல்லி அணி மிகச்சிறப்பாகவே செயல்பட்டு வந்தது. இதை மறுக்கவே முடியாது. அவர் கோச்சாக வந்த பிறகு ஒரு சீசனில் பைனல் வரை சென்றார்கள். மற்ற சீசன்களில் குறைந்தபட்சம் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றிருந்தார்கள். ஆனால் இந்த வருடம் டெல்லி அணி அப்படி செய்யவில்லை. வெற்றி பெற்றால் மட்டும் ரிக்கி பாண்டிங் காரணம் என்று அவரே பொறுப்பேற்றுக் கொள்ளும்பொழுது இந்த தோல்விக்கும் அவர்தான் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும்.
ஐபிஎல் போட்டிகளை பொருத்தவரை, அணியில் இருக்கும் அனைத்து வீரர்களுக்கும் நீங்கள் கோச்சிங் செய்ய வேண்டிய அவசியமே இல்லை. அவர்களிடம் இருக்கும் திறமையை எந்த இடத்தில் பயன்படுத்தினால் அணிக்கு பெஸ்ட் முடிவு கிடைக்கும். அணியின் வெற்றிக்கு எது வழி வகுக்கும் என்பதை மட்டும் யோசித்து பயன்படுத்தினால் போதுமானது. மனித மேலாண்மையை செய்யாத ரிக்கி பாண்டிங் தான் பொறுபெற்க வேண்டும்.” என்று விமர்சித்து இருக்கிறார் சேவாக்.