“ரிங்கு சிங் உள்ளே இருக்கும் வரை எங்களது வெற்றி இன்னும் உறுதியாகவில்லை எனும் பயத்திலேயே இருந்தேன்.” என போட்டி முடிந்த பிறகு பேட்டியளித்துள்ளார் க்ருனால் பாண்டியா.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிகள் மோதிய லீக் போட்டியில் லக்னோ அணி 176 ரன்கள் அடித்தது. இதனை சேஸ் செய்த கொல்கத்தா அணிக்கு கடைசி 3 ஓவர்களில் 50+ ரன்கள் தேவைப்பட்டது.
இந்த சீசன் முழுவதும் சிறப்பான பார்மில் இருக்கும் ரிங்கு சிங், சிக்ஸர் பவுண்டரிகளாக தெறிக்கவிட்டு, கிட்டத்தட்ட வெற்றியின் விளிம்புவரை கொல்கத்தா அணியை எடுத்துச்சென்றார். ஆனால் நூழிலையில் பினிஷ் செய்துகொடுக்க முடியவில்லை.
பரபரப்பாக முடிந்த போட்டியில் அதிர்ஷ்டவசமாக ஒரு ரன்னில் வெற்றி லக்னோ அணி வெற்றி பெற்றது. பிளே-ஆப் சுற்றுக்கும் லக்னோ அணி தகுதி பெற்றுவிட்டது.
போட்டி முடிந்த பிறகு பேட்டியளித்த லக்னோ அணியின் கேப்டன் க்ருனால் பாண்டியா பேசுகையில், “இப்போதுதான் கொஞ்சம் நிம்மதியாக இருக்கிறது. கடைசி வரை விட்டுக்கொடுக்காமல் எங்களது வீரர்கள் கடுமையாக போராடினார்கள். அவர்களுக்கு என்னுடைய பாராட்டுக்கள்.
இந்த சீசன் முழுவதும் ஸ்பெஷல் ஆட்டங்களை விளையாடியுள்ளார் ரிங்கு சிங். அவர் உள்ளே இருக்கும் வரை இந்த போட்டி முடியவில்லை மற்றும் எங்களது வெற்றி உறுதியாகவில்லை என்கிற பயத்திலேயே இருந்தேன். இன்றும் தான் யார் என்பதை அவர் காட்டிவிட்டார்.
ஒரு கட்டத்தில் 61 ரன்கள் அடித்து ஒரு விக்கெட் மட்டுமே இழந்திருந்தார்கள். வலுவான நிலையிலும் இருந்தார்கள். இதுபோன்ற சூழலை ஏற்கனவே நான் சந்தித்திருக்கிறேன் என்பதால், நடுவில் இரண்டு அல்லது மூன்று ஓவர்கள் கட்டுக்கோப்பாக வீசி ரன்களை லீக் செய்யாமல் இருந்தால் மீண்டும் ஆட்டத்திற்குள் வந்துவிடலாம் என்ற அனுபவமும் பெற்றிருந்தேன். அதன்படி செய்தோம். ஸ்பின்னர்களுக்கு இன்று நன்றாகவே எடுபட்டது.
கடைசி ஓவரை அனுபவம் இல்லாத வீரருக்கு கொடுக்க காரணம், அதற்கு முந்தைய சில ஓவர்களை நன்றாக வீசினார். அதிலிருந்து நல்ல நம்பிக்கையை பெற்றிருந்தார். அவரிடம் பேசியபோது நானும் அதை உணர்ந்தேன். இதனால் தான் அவரிடம் ஓவரை கொடுத்தேன்.” என்றார்.
இன்றைய போட்டியில் வெற்றி பெற்ற லக்னோ அணி சிஎஸ்கே அணியின் ரன்ரேட்டை தாண்டவில்லை. ஆகையால் இரண்டாவது இடத்தை உறுதி செய்தது சிஎஸ்கே அணி. ரன்ரேட் அடிப்படையில் மூன்றாவது இடத்தை லக்னோ அணி பெற்றது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வருகிற 23ஆம் தேதி நடைபெறும் முதல் குவாலிபயர் போட்டியில் சிஎஸ்கே அணி குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.