சேட்டை செய்த இளம் வீரருக்கு ஆப்பு அடித்த பி.சி.சி.ஐ
கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியைச் சேர்ந்த ரிங்கு சிங் தடையில்லாச் சான்று பெறாமல் அங்கீகாரம் பெறாத வெளிநாட்டு டி20 போட்டிகளில் பங்கேற்றதால் அவருக்கு 3 மாதம் தடை விதித்து பிசிசிஐ நடவடிக்கை எடுத்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் ரிங்கு சிங். இந்திய ஏ அணியில் இடம் பெற்று விளையாடி வருகிறார். ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியில் இடம் பெற்று ரிங்கு சிங் விளையாடி வருகிறார்.
அபுதாயில் அங்கீகாரம் பெறாத அபுதாபி ரமதான் டி20 போட்டித் தொடர் நடந்து வருகிறது. அந்த தொடரில் டெக்கான் கிளாடியேட்டர் அணியில் ரிங்கு சிங் இடம் பெற்று விளையாடி வருகிறார். இந்த தொடரில் சிறப்பாக ஆடிவரும் ரிங்கு சிங் சதம் அடித்து 2 விக்கெட்டுகள் வீழ்த்தி நல்ல ஃபார்மில் இருந்து வருகிறார்.
ஆனால், பிசிசிஐ அங்கீகாரம் பெறாத டி20 போட்டித் தொடரில், பிசிசிஐ அமைப்பின் தடையில்லாச் சான்று பெறாமல் ரிங்கு சிங் பங்கேற்றுள்ளார். பிசிசிஐ அமைப்பின் விதிமுறைகளை மீறி செயல்பட்டமைக்காக ரிங்கு சிங்கை 3 மாதங்கள் எந்தவிதமான கிரிக்கெட்டிலும் விளையாட தடை விதித்துள்ளது.
பிசிசிஐ விதிமுறைகளின்படி, வாரியத்தில் பதிவு செய்துள்ள ஒரு வீரர் வாரியத்தின் முன்அனுமதி, தடையில்லாச் சான்று பெறாமல் வெளிநாட்டு போட்டித் தொடர்களில் பங்கேற்க முடியாது. ஆனால் ரிங்கு சிங் அனுமதி பெறாமல் விளையாடியுள்ளார். ஆதலால், ரிங்கு சிங் உடனடியாக 3 மாதங்களுக்கு கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்படுகிறார். இந்த தடை ஜூன் 1-ம் தேதிமுதல் நடைமுறைக்கு வரும். அதுமட்டுமல்லாமல் இந்திய ஏ அணியில் இருந்தும் ரிங்கு சிங் நீக்கப்படுகிறார்.
இலங்கை ஏ அணியுடன் நாளை முதல் இந்திய ஏ அணி விளையாட இருந்தது. அந்த தொடரில் இருந்தும் ரிங்கு சிங் நீக்ககப்பட்டார். எதிர்காலத்தில் இதுபோன்ற ஒழுங்கீனங்கள், விதிமுறை மீறல்களை எந்த வீரர் செய்தது கண்டுபிடிக்கப்பட்டால் கடினமான நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற விதிமுறை மீறல்களை பிசிசிஐ பொறுத்துக்கொள்ளாது ” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.